31 March, 2011

ரசித்த நகைச்சுவை

ஒரு முறை போடி பேருந்து நிலையத்தில் கோவை செல்லும் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். பொதுவாக போடி வழியாக கோவை செல்லும் பேருந்த்துகள் மிகவும் குறைவு (அப்போது ஒன்றே ஒன்றுதான் இருந்தது) என்பதால், கூட்டம் மிக அதிகமாக இருக்கும். பேருந்து உள்ளே நுழைந்த உடனேயே எந்தெந்த வழியாக எல்லாம் உள்ளே நுழைய முடியுமோ அத்தனை வழிகளிலும் மக்கள் முண்டியடித்து ஏறிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் அவரவர் சக்திக்கு தகுந்தவாறு செருப்பு, குடை, கைக்குட்டை, துண்டு, கூடை போன்றவற்றை ஜன்னல் வழியாக நுழைத்து இடம் பிடிக்க ஆளாய்ப் பறந்து கொண்டிருந்தனர். ஒரு பய பக்கி, அவரின் 4-5 வயது மகனை ஜன்னல் வழியாக உள்ளே நுழைத்து இருவர் அமரும் சீட்டைப் பிடித்துவிட்டார். பேருந்து கிளம்ப சிறிது நேரமாகுமாதலால் அந்த ஆள் எங்கோ தம்மடிக்கப் போய்விட்டார்.

அப்போது கண்டக்டர் கூட்டத்தினுள் எப்படியோ புகுந்து டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அந்த குட்டிப்பையனின் அப்பா மட்டும் இன்னும் வரவில்லை. பையன் வேறு லைட்டாக அழ ஆரம்பித்துவிட்டான். இப்போது கண்டக்டருக்கும் அந்த குட்டிப்பையனுக்குமான உரையாடலைப் பாருங்கள்:

"டேய் தம்பி, உங்கூட யாரு வந்தா?", கண்டக்டர்.

"ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..."

கூட்டத்தைப் பார்த்து, "ஏம்பா, யாரப்பா இந்த பையன் கூட வந்தது?...யாருக்காச்சும் தெரியுமா?"

"டேய் தம்பி, யாரு கூடப்பா வந்த?"

"ஹூம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்......"

"உங்க அப்பா எங்கப்பா?"

பையன் சுதாரித்து, "அப்பாபாபாபாபாபா.....ம்ம்ம்ம்ம்...அவ்வ்வ்வ்..."

"யோவ், யாருய்யா இந்த பையனோட அப்பன்...எங்கியாச்சும் வெளிய கிளிய நிக்கிறானானு பாருங்கப்பா...டையமாச்சு...வண்டிய எடுக்கனும்...புள்ளைய விட்டுட்டு எங்குட்டு பராக்கு பாத்துக்கிட்டு இருக்கானோ..."

"தம்பி, உங்க அப்பா பேரென்ன?"

"அப்பாபாபாபாபாபா.....ம்ம்ம்ம்ம்"

"சரி...சரி, நீ எங்க போகனும்?"

"வீட்டுக்குப் போகனும்..ம்ம்ம்ம்..."

"சரிப்பா...வீடு எங்கயிருக்கு?"

"ஊருல...."

"எந்த ஊருல?"

"போடி..."

"காலங்காத்தால கடுப்படிக்கிறானே...வீடு போடிலனா அப்புறம் எதுக்கு பஸ்ல ஏறுனீங்க..."

"வீட்டுக்கு போக...."

"ஆண்டவா திரும்பவும் ஆரம்பிக்கிறானே...எந்த வீட்டுக்கு..?"

"தாத்தா வீட்டுக்கு..."

"தாத்தா வீடு எங்கயிருக்கு...?"

"ஊருல..."

"எந்த ஊரு...?"

"தாத்தா ஊரு...."

"டேய்ய்ய்ய்...ங்கொப்பன் மட்டும் எங்கையில மாட்டுனாய்ன்னு வச்சுக்க....."

"யேய்..விடப்பா...நீ எதுக்கு இம்புட்டு டென்சனாகுரவன்....என்னா ஏதுன்னு மெதுவாக் கேளப்பா...?", இன்னொருவர்.

"சரி சொல்லு, தாத்தா ஊரு எங்கயிருக்கு...?"

"எங்க தாத்தா வீடு இருக்குல...அங்கதான்..."

"டேய்ய்ய்ய்ய்ய்ய்......"

-ஷோபன்

No comments: