25 February, 2007

17. பருத்திவீரன் - ஒரு பார்வை

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பருத்திவீரன் படம் இன்றுதான் பார்த்தேன். ஒரு வரியில் சொல்வதானால் அசத்திவிட்டான் பருத்திவீரன்.

கதை என்று பார்த்தால் புதிதாக அல்லது பெரிதாக ஒன்றும் இல்லை (இது ஒரு உண்மைக் கதை). ஆனால் சொன்ன விதத்தில்தான் அட்டகாசமே.
பருத்திவீரனை விரட்டி விரட்டி காதலிக்கும் முத்தழகு, இதனை ஆதரிக்கும் ப.வீ.ன் சித்தப்பா செவ்வாயன், எதிர்க்கும் முத்தழகின் அப்பா கழுவன், காரணம் சாதி மற்றும் முன் பகை. கடைசியில் பருத்திவீரனும் முத்தழகும் என்ன ஆகிறார்கள் என்பதுதான் கதை.

பருத்திவீரனாக சூர்யாவின் தம்பி கார்த்தி, முத்தழகாக ப்ரியாமணி, செவ்வாயனாக சரவணன் ( நந்தாவில் ராஜ்கிரணின் மருமகனாக வருவாரே), கழுவனாக பொன்வண்ணன். வாழ்ந்திருக்காய்ங்கணே.

கார்த்திக்கு இது முதல் படமானே சந்தேகமா இருக்கு, அசத்துகிறார். கிட்டத்தட்ட சூர்யாவின் சாயல், உடல்மொழி மற்றும் குரல். இது இவருக்கு பலமா, பலவீனமா என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். இவருக்கு அட்டகாசமான கிராமத்து சண்டியர் பாத்திரம். ஒரு வேலையும் செய்யாமல், எப்போதும் மப்பில் திரிவது, ரம்மி விளையாடி காசு பார்ப்பது, அடிதடி, சண்டை வெட்டு குத்து என்று எப்போதும் பருத்தியூர் போலீஸ் ஸ்டேசனிலும், கமுதி கோர்ட்டிலும் கிடப்பது இதுதான் வேலை.

இது மிகவும் போரடித்துப் போக தன் வாழ்க்கையின் லட்சியமாக ஒருமுறையாவது சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு போக வேண்டும், டி.வி., பத்திரிக்கைகளுக்கு கை அசைத்தபடியே பேட்டி கொடுக்க வேண்டும் என்று சித்தப்பா செவ்வாயனிடம் தண்ணியடித்துவிட்டு உளருவது அட்டகாசம்.

படம் முழுக்க நக்கலும் நையாண்டியுமாக மதுரைத் தமிழில் பின்னுகிறார். முத்தழகுவின் காதலை ஏற்றுக்கொண்ட பின், நெஞ்சில் ஆர்ட்டின் படம் பச்சை குத்தி அதில் அம்பு விட சொல்வது, கரகாட்டக்காரர்களை மிரட்டி இவர்களுக்கு மட்டும் ஆடச்சொல்லி சித்தப்புவுடன் ஆட்டம் போடுவது, முத்தழகுவிடம் தன் காதலை வெளிப்படுத்திவிட்டு கெத்தாக நின்று போஸ் குடுப்பது, பின்னாலேயே சென்று கோவிலுக்கு வா என்று சொல்லிவிட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நாங்கெல்லாம் யாரு என்பது மாதிரியான கெத்தாக நடப்பது, கடைசிக்காட்சியில்.....அது வேண்டாம், திரையில் பாருங்கள், பின்னுகிறார் கார்த்தி.

ப்ரியாமணிக்கு இவ்வளவு நடிக்கத் தெரியுமா, அடுத்த சர்ப்பிரைஸ் இது. சரக்கு ஊற்றிக்குடுத்து வீரனை கட்டிலில் கட்டிப்போட்டு பச்சை குத்திவிடுவதாகட்டும், தூங்கிக்கொண்டிருக்கும் வீரன் மீது ஸ்டூலை எடுத்துப்போட்டு உக்கார்ந்து அவன் நெஞ்சின் மீது கால் வைத்து நாளைக்கு எனக்கு பொறந்த நாளு வந்து பாரு என்று மிரட்டுவதாகட்டும், வீரனுடன் சுற்றுவதை பார்த்த அப்பா கழுவன் வீட்டில் அடி பின்னிய பிறகு சோற்றை அள்ளிப்போட்டு, கறியுடன் சேர்ந்து பிசைந்து சாப்பிடும் வேகம் ஆகட்டும், வீட்டை விட்டு வீரனுடன் ஓடிப்போக முயலும் போது தடுக்கும் அம்மாவின் கழுத்தில் அரிவாளை வைத்து முறைப்பதாகட்டும், இவையனைத்தையும் விட கடைசிக்காட்சியில் பிரமாதப்படுத்திவிட்டார். ப்ரியாமணிக்கு ஒரு பேர் சொல்லும் படம்.

இவர்களைத் தவிர படம் முழுதும் வீரனின் கூடவே வரும் செவ்வாயன் சரவணன், கழுவன் பொன்வண்ணன், இவரது மனைவியாக வரும் பெண்மணி, அரைச்சாக்கு என்ற பெயரில் வரும் சிறுவன், கஞ்சா கருப்பு (பருத்திவீரனும் செவ்வாயனும் பண்ணுகிற அலப்பறைக்கு முன்னால் இவரின் காமெடி எடுபடவில்லை), மற்றும் பல பெயர் தெரியாத புது கிராமத்து முகங்கள் எல்லோரும் உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

வசனம், பாடல்கள், ஒலி, ஒளிப்பதிவு எல்லமே கிராமத்து வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. மதுரை ஸ்லாங் புரியாதவர்களுக்கு கொஞ்சமே கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அழுத்தமான கதை என்று இல்லாவிட்டாலும், பருத்திவீரன் செய்த சில தவறுகள் எப்படி முத்தழகுவை பாதித்தது என்ற க்ளைமாக்ஸ் நன்றாக இருந்தாலும், ஏதோ குறைவது போல் இருக்கிறது.

ஒரு அருமையான கிராமத்து காதல் கதையை பார்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக பார்க்கலாம். அட்லீஸ்ட் கார்த்தி மற்றும் ப்ரியாமணிக்காக பார்க்கலாம்.

மேலும்
சென்னைக் கச்சேரியில் தேவ் அண்ணனின் விமர்சனம்
குரல்வலை : வலைகுரலின் விமர்சனம் இங்கே

14 February, 2007

16. நான் ஏன் ஆராய்ச்சி மாணவன் ஆனேன்?

மிக முக்கிய 8 காரணங்கள்

1. எனக்கு தூக்கத்த, தூங்குறது பிடிக்கல.

2. என் வாழ்க்கைய போதும் போதுங்கிற அளவுக்கு எஞ்சாய் அதான் அனுபவிச்சிட்டேன்னு நெனக்கிறேன்.

3. மனசுல டென்சனே இல்லாம வாழ்றதெல்லாம் ஒரு வாழ்க்கையா (நாங்கெல்லாம் பிரச்சினைய போர்வையா போத்திக்கிட்டு தூங்குறவய்ங்க).

4. அப்பப்ப பண்ண பாவம், கருமாந்திரத்துக்கெல்லாம் பரிகாரம் பண்ணனும்னு நெனக்கிறேன்.

5. கீதை சொல்றத பாலோ பண்றேன் 'கடமய செய்யி, பலன எதிர்பாக்காத'.

6. வாழ்க்கையில நாம் செய்யிற ஒவ்வொண்னுத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கும், ஆனா அது என் வேலையில தப்புண்னு காட்டப்போறேன்.

7. என் குடும்பத்து மேல இருக்கிற கோவத்தையெல்லாம் பழி தீர்த்துக்கப் போறேன்.

8. எனக்கும், என் பாசக்கார பயபுள்ளைகளாகிய நண்பர்களுக்கும் இடையில ஒரு பிரிவு வேணும்னு நெனக்கிறேன்.


நண்பர்களே, இதெல்லாம் நான் எழுதலீங்க. என்னிய மாதிரியே ஆராய்ச்சி மாணவனா இருந்து வாழ்க்கைய வெறுத்த ஒரு பாசக்கார பயபுள்ள நொந்து போயி குறுஞ்சேவை தகவல்ல அனுப்புனது. இதேமாரி புண்பட்ட நெஞ்சங்கள் யாராவது இருக்கீங்களாப்பா?