31 March, 2011

இந்த வாரம் - 02 April 2011

ரசித்த புகைப்படம்

இந்தியா-ஆஸ்திரேலியா உலகக்கோப்பை கால்-இறுதி



பார்த்த சினிமா

50 First Dates - கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்துக்கொண்டிருந்த போது, அங்குள்ள திறந்தவெளி திரையரங்கில் பார்த்தது. மீண்டும் நேற்று இரவு பார்த்தேன். Short-term memory loss-ஐ பிண்ணனியாகக் கொண்ட பல படங்களில் இதுவும் ஒன்று. லூசி-க்கும் அவரது அப்பாவுக்கும் நடந்த ஒரு கார் விபத்தில் லூசிக்கு Short-term memory loss ஏற்படுகிறது. இவருடைய ஞாபகங்கள் ஒரு நாள்தான் இருக்கும், மறு நாள் காலை நேற்று நடந்தது எல்லாம் மறந்து புதிதாய் ஆரம்பிக்கும்.


இவரை ஒரு காஃபி ஷாப்பில் சந்திக்கும் ஜொள்ளன் + வெட்டினரி டாக்டர் ஹென்றி விரும்புகிறார். லூசிக்கு இப்படி ஒரு வியாதி இருப்பது ஹென்றிக்கு பின்னர்தான் தெரியவருகிறது. ஹென்றியும், லூசியின் அப்பா மற்றும் தம்பியும் இணைந்து எப்படி லூசிக்கு இதை புரியவைக்கிறார்கள், பின் எப்படி லூசியும், ஹென்றியும் இணைகிறார்கள் என்பதை மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். லூசியாக Drew Barrymoreம், ஹென்றியாக Adam Sandlerம் நடித்தது. ஒரு ஃபீல் குட் படம்.

எந்திரன் - படம் வெளியான அடுத்த நாள் அதிகாலையே இணையத்தில் ஹிந்தி பதிப்பு கிடைத்தது. எனக்கு ஹிந்தியில் ஹிந்தி என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் தெரியாததால் படம் பார்க்கவில்லை. வெகு நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் பார்க்கக் கிடைத்தது. நான் ரஜினியின் பரம ரசிகன்தான், இருந்தாலும் எந்திரன் பெரிதாக என்னைக் கவரவில்லை. சன் பிக்சர்ஸ், ஷங்கர், ரஹ்மான், பிரபல தொழில் நுட்பக் கலைஞர்கள், ஹாலிவுட் கிராபிக்ஸ் வல்லுனர்கள்....எல்லாம் சேர்ந்து திரும்பவும் ஒரு காதல் கதையைத்தான் கொடுத்திருக்கிறார்கள். உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் வல்லுனர்களை வைத்துக்கொண்டு, ஹாலிவுட்டுக்கே சவால் என்பதும், உலகத்தரம் என்று அவர்களே சொல்லிக்கொள்வதும் அசிங்கமாக இருக்கிறது. இத்தனை தொழில் நுட்ப நேர்த்திகளையும் தமிழர்களைக் கொண்டோ அல்லது பிற இந்திய கலைஞர்களைக் கொண்டோ செய்திருந்தால், மிகப் பெருமையாக ஹாலிவுட்டிற்கே சவால் என்று சொல்லிக்கொள்ளலாம்.



இவையனைத்தையும் தாண்டி எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது, ரஜினியின் உழைப்பு. இந்த வயதில் என்ன ஒரு உழைப்பு, அர்ப்பணிப்பு - Hats off! ஒரு மிகச்சிறந்த நடிகனை இப்படி கோமாளியாக ஆக்கிவிட்டார்களே என்ற வருத்தம்தான் மிஞ்சுகிறது.


படித்த புத்தகம்
இனிமேல் படித்த புத்தகங்களை தனியாக 'புத்தகம் - தலைப்பு - ஆசிரியர்' என்று தனிப்பதிவுகளாகவே போடலாமென்றிருக்கிறேன். முதல் புத்தக பதிவாக '5 Point Someone' by சேத்தன் பகத், விரைவில்.


செவிக்குணவில்லாத போது
கொஞ்சம் கிராண்டாக சாப்பிட வேண்டும், அதே சமயம் பாக்கெட்டும் பத்திரமாக இருக்கவேண்டுமா? அன்-லிமிடெடாக பலவித வெஜ், நான்-வெஜ் உணவுகள், டெசர்ட்கள் மற்றும் கூடவே அன்-லிமிடெட் பியரும் வேண்டுமா? ஆமாம்ப்பா..ஆமாம் என்றால் -

தாஜ் கேட்வே (Hotel Taj Gateway) - பெங்களூர் ரெசிடென்ஸி சாலையில், மேயோ ஹாலுக்கு எதிரே உள்ளது. இங்கு அருமையான இரவு பஃபே வெறும் ரூ.650 + Taxes க்கு கிடைக்கிறது. 10-15 விதமான ஸ்டார்டர்கள், உங்கள் டேபிளுக்கே வந்து வழங்கப்படுகிறது. அதைத் தவிர பலவித மெயின் கோர்ஸ் உணவுகள் மற்றும் விதவிதமான ஸ்வீட்கள், கேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் கூடவே பியர். தேவையெனில் வேறு காக்டெயில்களோ/ மாக்டெயில்களோ ஆர்டர் செய்து கொள்ளலாம் (இது தனி பில்..). ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித குசின்கள் - போன் செய்து விசாரித்துக் கொண்டு செல்லலாம்.

காதலியுடனோ/ குடும்பத்துடனோ சென்று, ஒரு பூல்-சைட் (Pool side) டேபிள் ரிசர்வ் செய்து கொண்டு ஆனந்தமாக ஒரு இரவு உணவை அனுபவிக்க சிறந்த இடம். (வருடத்திற்கு ஒருமுறையோ / இருமுறையோ செல்லலாம், எனக்கெல்லாம் அவ்வளவுதான் கட்டுபடியாகும் :-)).

அடுத்த வாரம் தாஜ் விவான்டா (Taj Vivanta, MG Road, Bangalore).

கொஞ்சம் அரசியல்
விஜயகாந்த் அவரது வேட்பாளரை அடித்த வீடியோ பார்த்தேன். கடுமையான தேர்தல் பிரச்சார அலைச்சலால் எவ்வளவுதான் மன அழுத்தம், உடல் நலக்குறைவு என்று எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம், ஆனாலும் இப்படி பொது இடங்களில் நடந்து கொள்வது நாகரீகம் இல்லை. அவரின் மீதுள்ள மரியாதை குறைகிறது. இந்த குறைந்த பட்ச பிரஷரைக்கூட மேனேஜ் செய்யமுடியாத இவர் ஆட்சிக்கு வந்து எப்படி பலமுக பிரஷர்களை சமாளிப்பார்?

ஆனால் எனக்கென்னவோ விஜயகாந்த் வந்துவிடுவார் போல்தான் தெரிகிறது. "அவரோட ஆளையே இந்த அடி அடிக்கிறாரே...அப்ப தப்பு செய்றவங்களை எப்பிடி அடிப்பாரு" என்று நம்பும் மக்கள் இருக்கும் வரை இவரை ஒன்றும் செய்யமுடியாது.


ஒரு SMS நகைச்சுவை

ஒரு எரிமலை வெடித்துச் சிதறுவதற்கு யாரும் கற்றுத்தருவதில்லை,
கடல் சுனாமியாய்ச் சீறுவதற்கு யாரும் கற்றுத்தருவதில்லை,
காற்று சூறாவளியாய் வீசுவதற்கு யாரும் கற்றுத்தருவதில்லை...
அது போல்.....

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுக்கவும் யாரும் கற்றுத்தருவதில்லை, ஏனெனில்.....................

இயற்கைச் சீற்றங்கள் தானாகத்தான் நிகழும் :-)

(SMS அனுப்பிய நண்பர் வெங்கடபதிக்கு நன்றி...நண்பேண்டா....)

அடுத்த வாரம் பார்க்கலாம்,
- ஷோபன்

ரசித்த நகைச்சுவை

ஒரு முறை போடி பேருந்து நிலையத்தில் கோவை செல்லும் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். பொதுவாக போடி வழியாக கோவை செல்லும் பேருந்த்துகள் மிகவும் குறைவு (அப்போது ஒன்றே ஒன்றுதான் இருந்தது) என்பதால், கூட்டம் மிக அதிகமாக இருக்கும். பேருந்து உள்ளே நுழைந்த உடனேயே எந்தெந்த வழியாக எல்லாம் உள்ளே நுழைய முடியுமோ அத்தனை வழிகளிலும் மக்கள் முண்டியடித்து ஏறிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் அவரவர் சக்திக்கு தகுந்தவாறு செருப்பு, குடை, கைக்குட்டை, துண்டு, கூடை போன்றவற்றை ஜன்னல் வழியாக நுழைத்து இடம் பிடிக்க ஆளாய்ப் பறந்து கொண்டிருந்தனர். ஒரு பய பக்கி, அவரின் 4-5 வயது மகனை ஜன்னல் வழியாக உள்ளே நுழைத்து இருவர் அமரும் சீட்டைப் பிடித்துவிட்டார். பேருந்து கிளம்ப சிறிது நேரமாகுமாதலால் அந்த ஆள் எங்கோ தம்மடிக்கப் போய்விட்டார்.

அப்போது கண்டக்டர் கூட்டத்தினுள் எப்படியோ புகுந்து டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அந்த குட்டிப்பையனின் அப்பா மட்டும் இன்னும் வரவில்லை. பையன் வேறு லைட்டாக அழ ஆரம்பித்துவிட்டான். இப்போது கண்டக்டருக்கும் அந்த குட்டிப்பையனுக்குமான உரையாடலைப் பாருங்கள்:

"டேய் தம்பி, உங்கூட யாரு வந்தா?", கண்டக்டர்.

"ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..."

கூட்டத்தைப் பார்த்து, "ஏம்பா, யாரப்பா இந்த பையன் கூட வந்தது?...யாருக்காச்சும் தெரியுமா?"

"டேய் தம்பி, யாரு கூடப்பா வந்த?"

"ஹூம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்......"

"உங்க அப்பா எங்கப்பா?"

பையன் சுதாரித்து, "அப்பாபாபாபாபாபா.....ம்ம்ம்ம்ம்...அவ்வ்வ்வ்..."

"யோவ், யாருய்யா இந்த பையனோட அப்பன்...எங்கியாச்சும் வெளிய கிளிய நிக்கிறானானு பாருங்கப்பா...டையமாச்சு...வண்டிய எடுக்கனும்...புள்ளைய விட்டுட்டு எங்குட்டு பராக்கு பாத்துக்கிட்டு இருக்கானோ..."

"தம்பி, உங்க அப்பா பேரென்ன?"

"அப்பாபாபாபாபாபா.....ம்ம்ம்ம்ம்"

"சரி...சரி, நீ எங்க போகனும்?"

"வீட்டுக்குப் போகனும்..ம்ம்ம்ம்..."

"சரிப்பா...வீடு எங்கயிருக்கு?"

"ஊருல...."

"எந்த ஊருல?"

"போடி..."

"காலங்காத்தால கடுப்படிக்கிறானே...வீடு போடிலனா அப்புறம் எதுக்கு பஸ்ல ஏறுனீங்க..."

"வீட்டுக்கு போக...."

"ஆண்டவா திரும்பவும் ஆரம்பிக்கிறானே...எந்த வீட்டுக்கு..?"

"தாத்தா வீட்டுக்கு..."

"தாத்தா வீடு எங்கயிருக்கு...?"

"ஊருல..."

"எந்த ஊரு...?"

"தாத்தா ஊரு...."

"டேய்ய்ய்ய்...ங்கொப்பன் மட்டும் எங்கையில மாட்டுனாய்ன்னு வச்சுக்க....."

"யேய்..விடப்பா...நீ எதுக்கு இம்புட்டு டென்சனாகுரவன்....என்னா ஏதுன்னு மெதுவாக் கேளப்பா...?", இன்னொருவர்.

"சரி சொல்லு, தாத்தா ஊரு எங்கயிருக்கு...?"

"எங்க தாத்தா வீடு இருக்குல...அங்கதான்..."

"டேய்ய்ய்ய்ய்ய்ய்......"

-ஷோபன்

ஊர்சுற்றி - நந்தி ஹில்ஸ், பெங்களூர்

பல நாட்களாகவே குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் எங்காவது வெளியே சென்று வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. ஒரு நாள் காலை 10 மணிக்கு மேல் முடிவு செய்து, அவசரமாக எல்லாம் பெட்டி கட்டிக்கொண்டு சூறாவளிச் சுற்றுப்பயணமாக நந்தி ஹில்ஸ் சென்று வந்தோம்.

நந்தி துர்க்கா என்ற நந்தி ஹில்ஸ் பெங்களூரிலிருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அடுத்து, சிக்கபேலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது. நந்தி ஹில்ஸ் என்ற பெயருக்கு பல கதைகள் இருப்பதாக விக்கிபீடியா சொல்கிறது. சோழர்கள் காலத்தில் 'ஆனந்தபுரி' என்றும், யோக நந்தீஸ்வரர் பெயரிலும், திப்பு சுல்தானின் கோட்டை (நந்திகள் காவல் தெய்வங்களாக கருதப்படுவதால் 'நந்தி துர்க்') இருப்பதாலும், அல்லது மிக தொலைவிலிருந்து பார்த்தால் மலையே நந்தி போல் தோன்றுவதாலும் நந்தி ஹில்ஸ் என்று அழைக்கப்படுகிறது. (பெரும்பாலான விபரங்களை விக்கி மற்றும் பல இணையதளங்களிலிருந்து சேகரித்துதான் எழுதுகிறேன்).

(காரில் செல்லும்போது நண்பர் எடுத்தது)

என்ன இருக்கிறது
மலையின் அடிவாரத்தில் 'போக நந்தீஸ்வரர்' கோவிலும், மலையின் மேல் 'உக்கிர நந்தீஸ்வரர்' மற்றும் 'யோக நந்தீஸ்வரர்' கோவிலும் இருக்கிறது. இவை கிட்டத்தட்ட 9-12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் கர்னாடகாவில் உள்ள மிகப் பழமையான கோவில்களுள் ஒன்றென்றும் சொல்லப்படுகிறது.

யோக நந்தீஸ்வரர் கோவில்
(நன்றி: bangalore.metblogs.com)

இதில் 'போக நந்தீஸ்வரர்' கோவிலின் அஸ்திவாரத்தை பனாஸ்கள் 9ம் நூற்றாண்டிலும், மேற்கூரையை சோழர்கள் 11ம் நூற்றாண்டிலும், திருமண மண்டபத்தை ஹொய்சாலர்கள் 13ம் நூற்றாண்டிலும், இரண்டாம் அடுக்கு பிரகாரத்தை விஜய நகர மன்னர்களும் கட்ட்டியதாக வரலாறு சொல்கிறது. இதைத் தவிர ஒரு அழகான குளமும் உள்ளது.

கல்யாணி குளம்
(நன்றி: bangalore.metblogs.com)

இவற்றைத் தவிர, திப்பு சுல்தானின் கோடைக்கால ஒய்வு மாளிகையும், கோட்டைச் சுற்றுச் சுவர்களும் உள்ளது. பென்னாறு, பாலாறு மற்றும் அர்காவதி ஆறு இம்மூன்றும் இங்கிருந்த்துதான் உற்பத்தியாகிறதாம், ஒன்றைக்கூட கண்ணில் காணமுடியவில்லை. திப்பு டிராப் (Tippu's Drop) எனப்படும் செங்குத்தான, ஆபத்தான மலைச்சரிவும் இருக்கிறது - இங்கிருந்துதான் திப்புவின் கைதிகளை மலையிலிருந்து தள்ளி கொல்வார்களாம்.

திப்பு டிராப் (Tippu's Drop)
(நன்றி: holidayiq.com)

இதைத் தவிர அரசு தோட்டக்கலைத் துறையினரின் நேரு நிலையம் என்ற விருந்தினர் விடுதி உள்ளது. மயூரா என்றொரு மொக்கையான உணவு விடுதியும், நான்கைந்து சிறிய பெட்டிக்கடைகளும் உள்ளன.

எப்படி போகலாம்?
பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து KSRTC பேருந்துகள் உள்ளன. காரில் செல்வதானால் - மேக்ரி சர்க்கிள் - பேலஸ் மைதானம் - RT நகர் வழியாக தேவனஹல்லி விமான நிலையம் செல்லும் அருமையான நான்கு வழி எக்ஸ்பிரஸ் சாலை உள்ளது. மலைப்பாதைகளும் நன்றாக இருக்கிறது. நிறைய வளைவுகள் மற்றும் ஏற்றம் அதிகமான பாதைகள். பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 70 கி.மீ. தான் என்பதால் நிறைய நண்பர்கள் இருசக்கர வாகனங்களிலும் வருகிறார்கள் (பெரும்பாலும் காதல் ஜோடிகள்). மாலை 6 மணிக்கு மேல் உள்ளே செல்ல அனுமதியில்லை.

காரில் செல்லும்போது நண்பர் எடுத்தது


மலைப்பாதை
(நன்றி: pawsalava.com)

கோட்டை நுழைவாயில்
(நன்றி: pawsalava.com)

 சாப்பிட?
வீட்டிலிருந்தே ஏதேனும் செய்து கொண்டு செல்வது நலம். மலை மேல் அழகான பூங்காவில் அமர்ந்து சாப்பிடலாம். நாங்கள் அவசரமாக கடைசி நேரத்தில் முடிவு செய்து கிளம்பியதால் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. 10 பாட்டில்களில் தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டோம் (போகுமிடமெல்லாம் தண்ணீரை 15 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்க மனதில்லை).


 தேவனஹல்லி விமான நிலையத்திற்கு முன் உள்ள டோல் கேட்டைத் தாண்டியஉடன் 'பஞ்சாவதி' என்றொரு தாபா போன்ற உணவகம் இருக்கிறது.  நல்ல ஸ்பைசியாக சாப்பிட விரும்பினால் இங்கு சாப்பிடலாம். ஒரு சிக்கன் பிரியாணி 75 ரூபாய்தான்(!). ரோட்டி, நான் போன்றவைகள் விலை குறைவுதான், ஆனால் சைட் டிஸ்களில் காசு பார்த்துவிடுகிறார்கள். அமுல் ஐஸ்கிரீம் கிடைக்கிறது.  இதைவிட்டால் இரண்டு, மூன்று ரெஸ்டாரண்டுகள் வழியில் இருக்கிறது, மலைக்கு மேல் மயூரா என்ற அரசு உணவு விடுதியும் (வெஜ்) இருக்கிறது.

எப்போது போகலாம்?
வருடம் முழுக்க போகலாம் என்றாலும், குளிர் காலங்களில் மிக அருமையாக இருக்கும். பிற நாட்களில் அதிகாலை செல்வது நன்றாக இருக்கும், மலையின் மேல் 5 மணிக்கு இருப்பது போல் சென்றால், சூரிய உதயத்தையும், அழகான அதிகாலைப் பனிமூட்டத்தையும் பார்த்து ரசிக்கலாம். அதிகாலை 5 மணி என்பதெல்லாம் நள்ளிரவு என்று என்னைப்போல சொல்பவர்கள் Google Imagesல் படம் பார்த்து ரசிக்கலாம் :-).


ஒரு சிறு குழுவாக நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ ஒரு நாள் பயணமாக சென்று வருவதற்கு ஏற்ற இடம்.


அடுத்த ஊர்சுற்றியில் குரங்கணி (தேனி மாவட்டம்).

- ஷோபன்

28 March, 2011

இந்த வாரம் - 28 March 2011

ஊர் சுற்றி
சென்ற வாரத்திலிருந்து அடுத்த வாரம் வரை வேலை பெரிதாக ஒன்றும் இல்லாததால், விடுமுறையில் இருக்கிறேன். எங்காவது வெளியில் ஊர் சுற்றலாமென்றால், மனைவிக்கு கைவசம் விடுப்புகள் இல்லை. எனவே நேற்று ஒரு நாள் மட்டும் எங்காவது செல்லலாம் என்று கிளம்பி, நந்தி ஹில்ஸ் (Nandi Hills, Bangalore) சென்றோம். இப்படி ஊர் சுற்றிய அனுபவங்களை 'ஊர் சுற்றி' என்ற தலைப்பில் எழுதலாம் என்று உத்தேசம்.

புத்தகம்
'ஒண்டிக்கட்டை உலகம்' - சிபி.கே.சாலமன் - கிழக்கு பதிப்பகம். 'உங்கள் பேச்சிலர் வாழ்க்கையின் அத்தனை சில்லறைத் தொந்தரவுகளுக்கும் தீர்வு சொல்கிறது இந்தப் புத்தகம்' என்று ஆரம்பிக்கின்ற அட்டையிலிருந்து பின் அட்டை வரை, ஒரு மெல்லிய புன்முறுவலுடன் படித்துக்கொண்டே போகலாம். ஒவ்வொரு அத்தியாயங்களின் தலைப்பே சுவாரஸ்யமாக நம்மை உள்ளே இழுக்கிறது, உதாரணம் - 'என் டான்டெக்ஸ்தான், எனக்கு மட்டும்தான்!' கிட்டத்தட்ட 'Dummies book for Bachelors' :-) போல இருந்தாலும், பழைய ஞாபகங்களை அசைபோட உதவுகிறது. என்னதான் உபயோகமான தகவல்களாக இருந்தாலும் ரூம் மேட் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் :-).

இ.ரா.முருகனின் 'அரசூர் வம்சம்' படிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஒரே மூச்சில் படிக்கும் அளவிற்கு புத்தகத்தில் சுவாரஸ்யம் இல்லையா, அல்லது எனக்குதான் அப்படி தோன்றுகிறதா என்று தெரியவில்லை. பார்க்கலாம். படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது - The Celestine Prophecy by James Redfield, Devil in Pinstripes by Ravi Subramaniyan, என் பெயர் வித்யா - லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் சில அமர் சித்திர கதைகள், இந்த வாரத்திற்கு.

சினிமா
நீண்ட நாட்கள் கழித்துதான் பல படங்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சென்ற 10 நாட்களில் பார்த்தது-

ஆடுகளம் - இது மனித உணர்வுகள் ஆடும் களம். பேட்டைக்காரர் பாத்திரம் அற்புதம் (பிண்ணனிக் குரல் ராதாரவியாம், வாவ்!). எனக்கு அவரின் மனைவியாக வருபவரின் பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது (மீனாள்). ஒரு சந்தேகம் - சேவல் சண்டையில் போது சேவலின் காலில் சிறிய கத்தியை கட்டியிருப்பார்கள், நான் நேரில் பார்த்திருக்கிறேன் - இந்த படத்தில் அதை எங்கேயும் காணோம் - ஒருவேளை நான் சரியாக கவனிக்கவில்லையா இல்லை இது ஒருவகையான சேவல் சண்டையா?

காவலன் - பயந்துகொண்டே பார்க்க ஆரம்பித்து, பின் முழுதாகப் பார்த்தேன். அசினா இது, விஜய்யை விட வயதானவராக தெரிகிறார், அசினைவிட வடிவேலுவின் ஜோடியாக வருபவர் நன்றாக இருந்தார் :-) (தீபா?). விஜய்யைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை - அப்படி அவசியம் விஜய்யைப் பற்றி ஏதாவது படித்தே ஆகவேண்டுமென்றால் பன்னிக்குட்டி ராமசாமியின் இந்த பதிவைப் படியுங்கள் :-).

Babel - சுவாரஸ்யம் இல்லாமல் பார்க்க ஆரம்பித்து, பின் பார்த்து முடிக்கும் வரை இடத்தை விட்டு எழுந்திடுக்கவே இல்லை. ஒரு கச்சிதமான நான்-லீனியர் திரைக்கதை. மொராக்கோவில், தம்பியாக வரும் சிறுவனும் அவனின் அப்பாவின் நடிப்பும் அற்புதம். முதன்முறையாக துப்பாக்கியை விலை பேசும் போது, விற்பவர் 1000 என்று சொல்வார், அப்பா 500 என்று கேட்கும் போது - ஒரு மெல்லிய சங்கோஜம் கலந்த புன்னகை + துப்பாக்கி வாங்கப் போகிறோம் என்கிற பெருமிதம் எல்லாம் கலந்த ஒரு முகபாவம், அற்புதம்.

ரசித்த நகைச்சுவை
சென்ற வாரம், என் மனைவியை அழைத்துக்கொண்டு வருவதற்காக செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு சென்றிடுந்தேன். அப்போது கேண்டீனில் ஒரு கணவன் மனைவி பேசிக்கொண்டதை கேட்டது.

"என்னங்க பெங்களூர்ல வெயில் இந்த போடு போடுது. ஏங்க கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வச்சா மழை பெய்யும்னு சொல்றாங்களே, அது உண்மையாங்க?"

கணவர் நக்கலாக, "இருக்கலாம்...உன் தங்கச்சி கல்யாணத்தன்னிக்கு மழை பேஞ்சதே".....ஒன்றும் புரியாமல் முழித்து பின் லேட்டாக புரிந்து கொண்டு மனைவி முறைக்க...நான் எஸ்கேப்.

ரசித்த பதிவு
கேபிள் சங்கரின் நான்-ஷர்மி-வைரம். ஆண் விபச்சாரம் பற்றி யாராவது எழுதுவார்களா என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, இனிய அதிர்ச்சியாக இந்த பதிவு. இப்படியெல்லாம் நடக்கிறதா என்று ஆச்சர்யமாய்/அதிர்ச்சியாய் பார்ப்பவர்களுக்கு: பெங்களூரின் டைம்ஸ் ஆஃப் இந்தியா-பெங்களூர் மிரர் போன்ற நாளிதழ்களில் வரும் வரி விளம்பரங்களைப் பாருங்கள்!

செங்கோவியின் சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி? - மிகவும் உபயோகமான பதிவு. அவரின் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கும் பதிகிறேன், எனது பதிவுகளையும் யாரேனும் படித்தால் பயன்படும்.

அன்பு செங்கோவி, உபயோகமான பதிவு. எனக்கு தெரிந்த சில டிப்ஸ்-
முதலில் நாம் முடிவு செய்ய வேண்டியது நாம் Resume தயார் செய்ய வேண்டுமா அல்லது CV தயார் செய்ய வேண்டுமா என்பது.

1. பொதுவாக Resume என்பது 1 அல்லது 2 பக்கங்களில் நம்முடைய வேலை அனுபவம், கல்வித்தகுதி மற்றும் special skill sets/ computer skills போன்றவை - எவ்வளவு சுருக்கமாக தர முடியுமோ அவ்வளவு நலம்.

2. CV என்பது சற்றே விரிவான (at least 3 pages) கல்வித்தகுதிகள், ஆராய்ச்சி மற்றும்/அல்லது ஆசிரியப் பணி அனுபவம், conference/journal publications, etc போன்றவை பற்றி ஒரு குறு அறிமுகம். CV - பொதுவாக கல்லூரி பணி, ஆராய்ச்சிப் பணி போன்ற பணிகளுக்கு CV உகந்தது, Resume அல்ல. எனவே, வேலைக்குத் தகுந்த CV/ Resume தயார் செய்வது அவசியம்.

3. Resume/CV top right headerல் "Resume of Sengovi" or "CV of Sengovi" என்று 2ம் பக்கத்திலிருந்து தருவதும் நல்லது. ஒருவேளை நீளமான பெயர் இருந்தால் முதல் பெயர் மட்டும் உசிதம்(உம்: அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் - "Resume of Chandran" போதும்).

4. Standard Font style உபயோகியுங்கள் (Arial/ Times New Roman) - fancy font களை தவிருங்கள்.

5. Skills போன்றவற்றை எழுதும் போது, குறைந்த பட்சம் அதைப் பற்றி தெரிந்த்தால் மட்டும் குறிப்பிடவும் - வேலைக்கு சேர்ந்த பின் படித்துக் கொள்ளலாம் என்றால் வேலைக்கே ஆகாது :-). LS DYNA தெரியும் என்று போட்டுவிட்டு, கேட்டால் 'தெருவில் போகும் போது விளம்பரம் பார்த்திருக்கிறேன்' என்று வழியக்கூடாது ;-) தெரியாதென்றால் தெரியாது என்று நேர்மையாக ஒத்துக்கொள்வது மிக நல்லது.

6. கேட்டால் ஒழிய புகைப்படம் தேவையில்லை.

7. கேட்டால் ஒழிய Referencesம் தேவையில்லை.

8. முக்கியமாக - நீங்கள் நேரில் சென்று கொடுக்கும் அல்லது hard copy யாக அனுப்பும் Resumeல் மட்டும் Declaration என்னும் 'நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறோன்றுமில்லை :-) பகுதியை இணைத்து கையொப்பமிடலாம். Email or Online application களில் இது தேவையில்லை.

9. உபயோகத்தில் உள்ள email address and Phone number கொடுக்கவும். Decent ஆன readable email ID யாக இருத்தல் நலம் (உம்: பட்டாசுபாலு@சிவகாசி.com ;-)

10. கடைசியாக, உங்கள் Resume/CV யை அனுப்பப்போகும் கம்பெனியின் HR ஸ்தானத்திலிருந்த்து உங்கள் Resumeஐ படித்துப் பாருங்கள் - உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்த்தாலொழிய அனுப்ப வேண்டாம், சிறிய திருத்தங்ககள் செய்த பின் அனுப்பவும். தயவுசெய்து spelling mistakes இல்லாமல் அனுப்பவும்.

வாழ்த்துக்கள்!

அடுத்த வாரம் பார்க்கலாம்,
-ஷோபன்

21 March, 2011

பிச்சைக்காரர்களின் தேசம்

நான் சராசரியாக நாளொன்றுக்கு 18-20 மணி நேரம் உழைக்கிறேன். என்னுடைய மாத சம்பளத்திலிருந்து பைசா சுத்தமாக கணக்கு பண்ணி வருமான வரி அரசாங்கத்திற்கு போகிறது. இதுவரை வருமான வரி ஏய்ப்பு செய்ததில்லை, செய்யவும் முடியாது - காரணம், அலுவலகங்களிலேயே வரி மற்றும் இதர பிடிப்புகள் போகத்தான் சம்பளம் கணக்கிற்கு வருகிறது. கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு வரியாகப் போகிறது. நான் மட்டுமல்ல, என்னைப்போல் ஐ.டி. யில், மென்பொருள் துறையில், கன்சல்டிங்கில், உற்பத்தித்துறையில்...என அனைவரின் உழைப்பின் ஒரு பகுதி வரியாக அரசாங்கத்திற்குப் போகிறது. அரசாங்க கஜானாவின் ஒரு பகுதி நம் வரிப்பணத்தால்தான் நிறைகிறது. நிற்க.

இதெல்லாம் இப்படியிருக்க, இவர்கள் விடும் தேர்தல் அறிக்கைகள் மற்றும் வாக்குறுதிகளைப் பார்க்கும்போதெல்லாம் பற்றிக்கொண்டு வருகிறது. எல்லாம் இலவசம் - டி.வி. இலவசம், மிக்ஸி இலவசம், கிரைண்டர் இலவசம், ...ஜட்டியும் கூட இலவசம். ஏண்டா டேய்...நாங்க உழைச்சு உழைச்சு வரியாக் கொட்டுவோம், நீங்க மசுரே போச்சுனு 'ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டிங்க கையே'னு ஊருக்கெல்லாம் இலவசமா குடுப்பீங்களா? இன்னும் எத்தனை நாட்களுக்கு எங்களை பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்க உத்தேசம்.

எத்தனையோ கிராமங்களில் மின்சார வசதி இல்லை, நல்ல சாலை வசதி இல்லை, குறைந்த பட்ச மருத்துவ வசதிகள் இல்லை, குடி நீர் இல்லை, குண்டி கழுவ தண்ணீர் இல்லை...கழுவ என்ன கழுவ...முதலில் நல்ல கழிப்பிட வசதியில்லை. பெரு நகரங்களில் மட்டும் என்ன, நல்ல பொதுக்கழிப்பிடங்கள் இருக்கிறதா? பெரிதாய்ப் பீற்றிக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை விடும் பெருந்தலைவர்களே, உங்களால் ஒரே ஒருவேளை இந்த பொதுக்கழிப்பிடங்களை உபயோகப்படுத்த முடியுமா? அப்புறம் என்ன இழவிற்கு இலவச லேப்-டாப்பும் இலவச மிக்ஸியும்?

ஐயா பெருந்தலைவர்களே, எங்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாகவே தந்து எங்களைக் கேவலப்படுத்தாமல், இவை எல்லாவற்றையும் எங்கள் உழைப்பால் நாங்களாகவே வாங்கிக்கொள்ளும் அளவிற்கு எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துங்கள், அதற்கான சமூக, பொருளாதார மாற்றங்க்களை கொண்டு வாருங்கள். எனக்கு எந்த கட்சி இலவசமாக மிக்ஸி கொடுக்கிறது என்று பார்ப்பதை விட, எந்த பிராண்ட் மிக்ஸி எனக்குத் தேவை என்று நானே பார்த்து வாங்கிக்கொள்ளும் அளவிற்கு என் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினால், உங்களுக்கு புண்ணியமாய்ப் போகும்.

இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை, நம் மக்களை சொல்ல வேண்டும். எனக்கு பிச்சைக்காரனாகவே இருப்பதுதான் பிடிக்கிறது என்பவர்களை என்ன செய்வது. பொருளாதார அறிவியலில் ஒன்று சொல்வார்கள் - 'there is no such thing as a free lunch' - இந்த உலகில் இலவசம் என்று ஒன்று கிடையாது. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு இலவசமும் இன்னொருவரின் உழைப்பால் வந்தது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இலவச டி.வி.களும், மிக்ஸிகளும் உங்களை மகிழ்விக்குமேயானால், நீங்களும் ஒரு வகையில் திருடர்கள்தான் என்பதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

-- ஷோபன்

18 March, 2011

இந்த வாரம் - 18 March 2011

இந்த வாரம் - 18 March 2011


இந்த வாரம் என்ற தலைப்பில் நான் ரசித்த, பார்த்த, படித்த விஷயங்களை எழுத உத்தேசம்.


புத்தகங்கள்...

  1. ராஜீவ் கொலை வழக்கு - ரகோத்தமன் - கிழக்கு பதிப்பகம்.
  2. விடுதலைப் புலிகள் - மருதன் - கிழக்கு பதிப்பகம்.
  3. பிரபாகரன் வாழ்வும் மரணமும் - பா.ராகவன் - கிழக்கு பதிப்பகம்.

என் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ராஜீவ் புத்தகத்தை வாங்கலாம் என்று கிழக்கை கிளிக்கிய போது ஒரு அருமையான தள்ளுபடி பற்றிய விளம்பரம் கண்டேன் (இருபது புத்தகங்கள் ஆயிரம் ரூபாய்). அந்த சலுகையில் வாங்கிய புத்தகங்கள்தான் இவை. மேலே குறிப்பிட்ட வரிசையில்தான் அவற்றை படித்தேன் - இது எதேச்சையானதுதான், ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது.

ராஜீவ் கொலை வழக்கு - அருமையாக் எழுதப்பட்ட புத்தகம் என்பதைவிட இது ஒரு அருமையான ஆவணம். அட்டை-முதல்-அட்டை-வரை விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. விடுதலைப் புலிகளின் திட்டமிடல், சுய கட்டுப்பாடு, அவர்களின் நெட்வொர்க் போன்றவை வியப்படைய வைக்கின்றன. எதற்காக இப்படி ஒரு கொலை - அடுத்த புத்தகத்தில் விரிவாக இருக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கை ஆரம்பமாக வைத்து, விடுதலைப் புலிகளின் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவாக அலசுகிறார் மருதன். என்னைப் போல ஈழம் பற்றிய பிரச்சினைகளை முழுதும் தெரியாத தற்குறிகளுக்கு இந்த புத்தகம் ஒரு நல்ல ஆரம்பம். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் அதற்கு ஆணி வேராக ஒருவர் இருக்க வேண்டுமே - அடுத்த புத்தகத்தில் இன்னும் விரிவாக இருக்கிறது.

பிரபாகரன் என்ற மாபெரும் போராளியைப் பற்றியும், தமிழ் ஈழ பிரச்சினை பற்றியும் 206 பக்கங்களுக்குள் எழுதுவது என்பது சவால்தான் - பா.ராகவன் மிகத் திறமையாக, கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களையும் தொட்டுச் செல்கிறார். இந்த மூன்று புத்தகங்களும் ஒரு அருமையான தொகுப்பு, அவசியம் உங்கள் புத்தக அலமாரியில் இருக்கலாம்.

செவிக்கு உணவில்லாத போது...

சென்ற இரண்டு வாரங்களாக ஒரு அமெரிக்கன் கிளையண்டிற்கான மேனேஜ்மென்ட் கன்சல்ட்டிங் (அப்படி என்றால் என்னவென்று கடைசியில்) வேலையால் அலுவலகத்தில் இரவு நீண்ட நேரம் இருக்க வேண்டியதானது. ஒரு நாள் இரவு உணவிற்கு, டாமினோஸ் பீட்ஸா - டபுள் பர்ஸ்ட் ஆர்டர் செய்தேன் - ம்ம்ம் சூப்பர்...

ரசித்த பதிவு...

ரெட்டைவாலின் இந்த பதிவு - நன்றி ரெட்டைவால்.

ரசித்த பாடல்...

எவண்டி உன்ன பெத்தான்...கைல கிடைச்சா செத்தான். இந்த லிங்க்கில் இருக்கும் முதல் கமெண்ட் பாடலை விட அருமை.

- உன்ன பார்த்த ஃபர்ஸ்ட் செகண்ட்ல 'கல்ல' காணோம்....தேடிப்பாக்குறேன் உங்கப்பன் டி.ஆர்-ஐயும் காணோம்... :-)

மேனேஜ்மென்ட் கன்சல்ட்டன்சி....

.....என்றால், உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை உங்களிடமே கேட்டு, அதற்கான தீர்வையும் உங்களிடமிருந்தே கறந்து, அதை அழகாக ஜிகினா ஒட்டி, பார்சல் பண்ணி உங்களுக்கு கொடுத்தால்...நான் செய்வதற்குப் பேர்தான் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி, நீங்கள் செய்வதற்குப் பேர்தான் 'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது' ;-)

அடுத்த வாரம் பார்க்கலாம்.

-ஷோபன்

மீண்டு(ம்) நான்

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வணக்கம். நானும் வலைப்பூ ஆரம்பிக்கிறேன் பேர்வழி என்று சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இது. எழுத ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது, இது சாதாரண வேலையில்லை, குறைந்தபட்ச உழைப்பாவது தேவை என்று. வெறுமனே வந்து ஜல்லியடித்துவிட்டுப் போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்போதிருந்து பிற வலைப்பதிவுகளை படிப்பதோடு சரி.

அதெல்லாம் சரி, இப்போது எதற்கு மீண்டும் என்று கேட்கிறீர்களா? வேலைப்பளு மிக அதிகமாகி விட்டது - ஒரு வடிகாலாக இந்த வலைப்பூவை மீண்டும் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன். குறைந்தபட்சம் வாரம் ஒரு பதிவாவது இட முடியுமா என்று பார்க்கலாம். எனக்கு அவ்வளவு நன்றாக எழுத வராது, பரவாயில்லை, எழுதிப்பழகலாம் - ஒரு சினிமாவைப் பற்றியோ, அழகான பாடலைப் பற்றியோ, நல்ல புத்தகத்தைப் பற்றியோ, தொழில் துறை/ நுட்பங்களைப் பற்றியோ - எதையாவது எழுதிப்பார்ப்போம்....

....பார்போம், எவ்வளவு நாள் இது தொடர்கிறது என்று.

-ஷோபன்