28 March, 2011

இந்த வாரம் - 28 March 2011

ஊர் சுற்றி
சென்ற வாரத்திலிருந்து அடுத்த வாரம் வரை வேலை பெரிதாக ஒன்றும் இல்லாததால், விடுமுறையில் இருக்கிறேன். எங்காவது வெளியில் ஊர் சுற்றலாமென்றால், மனைவிக்கு கைவசம் விடுப்புகள் இல்லை. எனவே நேற்று ஒரு நாள் மட்டும் எங்காவது செல்லலாம் என்று கிளம்பி, நந்தி ஹில்ஸ் (Nandi Hills, Bangalore) சென்றோம். இப்படி ஊர் சுற்றிய அனுபவங்களை 'ஊர் சுற்றி' என்ற தலைப்பில் எழுதலாம் என்று உத்தேசம்.

புத்தகம்
'ஒண்டிக்கட்டை உலகம்' - சிபி.கே.சாலமன் - கிழக்கு பதிப்பகம். 'உங்கள் பேச்சிலர் வாழ்க்கையின் அத்தனை சில்லறைத் தொந்தரவுகளுக்கும் தீர்வு சொல்கிறது இந்தப் புத்தகம்' என்று ஆரம்பிக்கின்ற அட்டையிலிருந்து பின் அட்டை வரை, ஒரு மெல்லிய புன்முறுவலுடன் படித்துக்கொண்டே போகலாம். ஒவ்வொரு அத்தியாயங்களின் தலைப்பே சுவாரஸ்யமாக நம்மை உள்ளே இழுக்கிறது, உதாரணம் - 'என் டான்டெக்ஸ்தான், எனக்கு மட்டும்தான்!' கிட்டத்தட்ட 'Dummies book for Bachelors' :-) போல இருந்தாலும், பழைய ஞாபகங்களை அசைபோட உதவுகிறது. என்னதான் உபயோகமான தகவல்களாக இருந்தாலும் ரூம் மேட் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் :-).

இ.ரா.முருகனின் 'அரசூர் வம்சம்' படிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஒரே மூச்சில் படிக்கும் அளவிற்கு புத்தகத்தில் சுவாரஸ்யம் இல்லையா, அல்லது எனக்குதான் அப்படி தோன்றுகிறதா என்று தெரியவில்லை. பார்க்கலாம். படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது - The Celestine Prophecy by James Redfield, Devil in Pinstripes by Ravi Subramaniyan, என் பெயர் வித்யா - லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் சில அமர் சித்திர கதைகள், இந்த வாரத்திற்கு.

சினிமா
நீண்ட நாட்கள் கழித்துதான் பல படங்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சென்ற 10 நாட்களில் பார்த்தது-

ஆடுகளம் - இது மனித உணர்வுகள் ஆடும் களம். பேட்டைக்காரர் பாத்திரம் அற்புதம் (பிண்ணனிக் குரல் ராதாரவியாம், வாவ்!). எனக்கு அவரின் மனைவியாக வருபவரின் பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது (மீனாள்). ஒரு சந்தேகம் - சேவல் சண்டையில் போது சேவலின் காலில் சிறிய கத்தியை கட்டியிருப்பார்கள், நான் நேரில் பார்த்திருக்கிறேன் - இந்த படத்தில் அதை எங்கேயும் காணோம் - ஒருவேளை நான் சரியாக கவனிக்கவில்லையா இல்லை இது ஒருவகையான சேவல் சண்டையா?

காவலன் - பயந்துகொண்டே பார்க்க ஆரம்பித்து, பின் முழுதாகப் பார்த்தேன். அசினா இது, விஜய்யை விட வயதானவராக தெரிகிறார், அசினைவிட வடிவேலுவின் ஜோடியாக வருபவர் நன்றாக இருந்தார் :-) (தீபா?). விஜய்யைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை - அப்படி அவசியம் விஜய்யைப் பற்றி ஏதாவது படித்தே ஆகவேண்டுமென்றால் பன்னிக்குட்டி ராமசாமியின் இந்த பதிவைப் படியுங்கள் :-).

Babel - சுவாரஸ்யம் இல்லாமல் பார்க்க ஆரம்பித்து, பின் பார்த்து முடிக்கும் வரை இடத்தை விட்டு எழுந்திடுக்கவே இல்லை. ஒரு கச்சிதமான நான்-லீனியர் திரைக்கதை. மொராக்கோவில், தம்பியாக வரும் சிறுவனும் அவனின் அப்பாவின் நடிப்பும் அற்புதம். முதன்முறையாக துப்பாக்கியை விலை பேசும் போது, விற்பவர் 1000 என்று சொல்வார், அப்பா 500 என்று கேட்கும் போது - ஒரு மெல்லிய சங்கோஜம் கலந்த புன்னகை + துப்பாக்கி வாங்கப் போகிறோம் என்கிற பெருமிதம் எல்லாம் கலந்த ஒரு முகபாவம், அற்புதம்.

ரசித்த நகைச்சுவை
சென்ற வாரம், என் மனைவியை அழைத்துக்கொண்டு வருவதற்காக செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு சென்றிடுந்தேன். அப்போது கேண்டீனில் ஒரு கணவன் மனைவி பேசிக்கொண்டதை கேட்டது.

"என்னங்க பெங்களூர்ல வெயில் இந்த போடு போடுது. ஏங்க கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வச்சா மழை பெய்யும்னு சொல்றாங்களே, அது உண்மையாங்க?"

கணவர் நக்கலாக, "இருக்கலாம்...உன் தங்கச்சி கல்யாணத்தன்னிக்கு மழை பேஞ்சதே".....ஒன்றும் புரியாமல் முழித்து பின் லேட்டாக புரிந்து கொண்டு மனைவி முறைக்க...நான் எஸ்கேப்.

ரசித்த பதிவு
கேபிள் சங்கரின் நான்-ஷர்மி-வைரம். ஆண் விபச்சாரம் பற்றி யாராவது எழுதுவார்களா என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, இனிய அதிர்ச்சியாக இந்த பதிவு. இப்படியெல்லாம் நடக்கிறதா என்று ஆச்சர்யமாய்/அதிர்ச்சியாய் பார்ப்பவர்களுக்கு: பெங்களூரின் டைம்ஸ் ஆஃப் இந்தியா-பெங்களூர் மிரர் போன்ற நாளிதழ்களில் வரும் வரி விளம்பரங்களைப் பாருங்கள்!

செங்கோவியின் சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி? - மிகவும் உபயோகமான பதிவு. அவரின் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கும் பதிகிறேன், எனது பதிவுகளையும் யாரேனும் படித்தால் பயன்படும்.

அன்பு செங்கோவி, உபயோகமான பதிவு. எனக்கு தெரிந்த சில டிப்ஸ்-
முதலில் நாம் முடிவு செய்ய வேண்டியது நாம் Resume தயார் செய்ய வேண்டுமா அல்லது CV தயார் செய்ய வேண்டுமா என்பது.

1. பொதுவாக Resume என்பது 1 அல்லது 2 பக்கங்களில் நம்முடைய வேலை அனுபவம், கல்வித்தகுதி மற்றும் special skill sets/ computer skills போன்றவை - எவ்வளவு சுருக்கமாக தர முடியுமோ அவ்வளவு நலம்.

2. CV என்பது சற்றே விரிவான (at least 3 pages) கல்வித்தகுதிகள், ஆராய்ச்சி மற்றும்/அல்லது ஆசிரியப் பணி அனுபவம், conference/journal publications, etc போன்றவை பற்றி ஒரு குறு அறிமுகம். CV - பொதுவாக கல்லூரி பணி, ஆராய்ச்சிப் பணி போன்ற பணிகளுக்கு CV உகந்தது, Resume அல்ல. எனவே, வேலைக்குத் தகுந்த CV/ Resume தயார் செய்வது அவசியம்.

3. Resume/CV top right headerல் "Resume of Sengovi" or "CV of Sengovi" என்று 2ம் பக்கத்திலிருந்து தருவதும் நல்லது. ஒருவேளை நீளமான பெயர் இருந்தால் முதல் பெயர் மட்டும் உசிதம்(உம்: அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் - "Resume of Chandran" போதும்).

4. Standard Font style உபயோகியுங்கள் (Arial/ Times New Roman) - fancy font களை தவிருங்கள்.

5. Skills போன்றவற்றை எழுதும் போது, குறைந்த பட்சம் அதைப் பற்றி தெரிந்த்தால் மட்டும் குறிப்பிடவும் - வேலைக்கு சேர்ந்த பின் படித்துக் கொள்ளலாம் என்றால் வேலைக்கே ஆகாது :-). LS DYNA தெரியும் என்று போட்டுவிட்டு, கேட்டால் 'தெருவில் போகும் போது விளம்பரம் பார்த்திருக்கிறேன்' என்று வழியக்கூடாது ;-) தெரியாதென்றால் தெரியாது என்று நேர்மையாக ஒத்துக்கொள்வது மிக நல்லது.

6. கேட்டால் ஒழிய புகைப்படம் தேவையில்லை.

7. கேட்டால் ஒழிய Referencesம் தேவையில்லை.

8. முக்கியமாக - நீங்கள் நேரில் சென்று கொடுக்கும் அல்லது hard copy யாக அனுப்பும் Resumeல் மட்டும் Declaration என்னும் 'நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறோன்றுமில்லை :-) பகுதியை இணைத்து கையொப்பமிடலாம். Email or Online application களில் இது தேவையில்லை.

9. உபயோகத்தில் உள்ள email address and Phone number கொடுக்கவும். Decent ஆன readable email ID யாக இருத்தல் நலம் (உம்: பட்டாசுபாலு@சிவகாசி.com ;-)

10. கடைசியாக, உங்கள் Resume/CV யை அனுப்பப்போகும் கம்பெனியின் HR ஸ்தானத்திலிருந்த்து உங்கள் Resumeஐ படித்துப் பாருங்கள் - உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்த்தாலொழிய அனுப்ப வேண்டாம், சிறிய திருத்தங்ககள் செய்த பின் அனுப்பவும். தயவுசெய்து spelling mistakes இல்லாமல் அனுப்பவும்.

வாழ்த்துக்கள்!

அடுத்த வாரம் பார்க்கலாம்,
-ஷோபன்

No comments: