31 March, 2011

ஊர்சுற்றி - நந்தி ஹில்ஸ், பெங்களூர்

பல நாட்களாகவே குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் எங்காவது வெளியே சென்று வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. ஒரு நாள் காலை 10 மணிக்கு மேல் முடிவு செய்து, அவசரமாக எல்லாம் பெட்டி கட்டிக்கொண்டு சூறாவளிச் சுற்றுப்பயணமாக நந்தி ஹில்ஸ் சென்று வந்தோம்.

நந்தி துர்க்கா என்ற நந்தி ஹில்ஸ் பெங்களூரிலிருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அடுத்து, சிக்கபேலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது. நந்தி ஹில்ஸ் என்ற பெயருக்கு பல கதைகள் இருப்பதாக விக்கிபீடியா சொல்கிறது. சோழர்கள் காலத்தில் 'ஆனந்தபுரி' என்றும், யோக நந்தீஸ்வரர் பெயரிலும், திப்பு சுல்தானின் கோட்டை (நந்திகள் காவல் தெய்வங்களாக கருதப்படுவதால் 'நந்தி துர்க்') இருப்பதாலும், அல்லது மிக தொலைவிலிருந்து பார்த்தால் மலையே நந்தி போல் தோன்றுவதாலும் நந்தி ஹில்ஸ் என்று அழைக்கப்படுகிறது. (பெரும்பாலான விபரங்களை விக்கி மற்றும் பல இணையதளங்களிலிருந்து சேகரித்துதான் எழுதுகிறேன்).

(காரில் செல்லும்போது நண்பர் எடுத்தது)

என்ன இருக்கிறது
மலையின் அடிவாரத்தில் 'போக நந்தீஸ்வரர்' கோவிலும், மலையின் மேல் 'உக்கிர நந்தீஸ்வரர்' மற்றும் 'யோக நந்தீஸ்வரர்' கோவிலும் இருக்கிறது. இவை கிட்டத்தட்ட 9-12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் கர்னாடகாவில் உள்ள மிகப் பழமையான கோவில்களுள் ஒன்றென்றும் சொல்லப்படுகிறது.

யோக நந்தீஸ்வரர் கோவில்
(நன்றி: bangalore.metblogs.com)

இதில் 'போக நந்தீஸ்வரர்' கோவிலின் அஸ்திவாரத்தை பனாஸ்கள் 9ம் நூற்றாண்டிலும், மேற்கூரையை சோழர்கள் 11ம் நூற்றாண்டிலும், திருமண மண்டபத்தை ஹொய்சாலர்கள் 13ம் நூற்றாண்டிலும், இரண்டாம் அடுக்கு பிரகாரத்தை விஜய நகர மன்னர்களும் கட்ட்டியதாக வரலாறு சொல்கிறது. இதைத் தவிர ஒரு அழகான குளமும் உள்ளது.

கல்யாணி குளம்
(நன்றி: bangalore.metblogs.com)

இவற்றைத் தவிர, திப்பு சுல்தானின் கோடைக்கால ஒய்வு மாளிகையும், கோட்டைச் சுற்றுச் சுவர்களும் உள்ளது. பென்னாறு, பாலாறு மற்றும் அர்காவதி ஆறு இம்மூன்றும் இங்கிருந்த்துதான் உற்பத்தியாகிறதாம், ஒன்றைக்கூட கண்ணில் காணமுடியவில்லை. திப்பு டிராப் (Tippu's Drop) எனப்படும் செங்குத்தான, ஆபத்தான மலைச்சரிவும் இருக்கிறது - இங்கிருந்துதான் திப்புவின் கைதிகளை மலையிலிருந்து தள்ளி கொல்வார்களாம்.

திப்பு டிராப் (Tippu's Drop)
(நன்றி: holidayiq.com)

இதைத் தவிர அரசு தோட்டக்கலைத் துறையினரின் நேரு நிலையம் என்ற விருந்தினர் விடுதி உள்ளது. மயூரா என்றொரு மொக்கையான உணவு விடுதியும், நான்கைந்து சிறிய பெட்டிக்கடைகளும் உள்ளன.

எப்படி போகலாம்?
பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து KSRTC பேருந்துகள் உள்ளன. காரில் செல்வதானால் - மேக்ரி சர்க்கிள் - பேலஸ் மைதானம் - RT நகர் வழியாக தேவனஹல்லி விமான நிலையம் செல்லும் அருமையான நான்கு வழி எக்ஸ்பிரஸ் சாலை உள்ளது. மலைப்பாதைகளும் நன்றாக இருக்கிறது. நிறைய வளைவுகள் மற்றும் ஏற்றம் அதிகமான பாதைகள். பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 70 கி.மீ. தான் என்பதால் நிறைய நண்பர்கள் இருசக்கர வாகனங்களிலும் வருகிறார்கள் (பெரும்பாலும் காதல் ஜோடிகள்). மாலை 6 மணிக்கு மேல் உள்ளே செல்ல அனுமதியில்லை.

காரில் செல்லும்போது நண்பர் எடுத்தது


மலைப்பாதை
(நன்றி: pawsalava.com)

கோட்டை நுழைவாயில்
(நன்றி: pawsalava.com)

 சாப்பிட?
வீட்டிலிருந்தே ஏதேனும் செய்து கொண்டு செல்வது நலம். மலை மேல் அழகான பூங்காவில் அமர்ந்து சாப்பிடலாம். நாங்கள் அவசரமாக கடைசி நேரத்தில் முடிவு செய்து கிளம்பியதால் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. 10 பாட்டில்களில் தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டோம் (போகுமிடமெல்லாம் தண்ணீரை 15 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்க மனதில்லை).


 தேவனஹல்லி விமான நிலையத்திற்கு முன் உள்ள டோல் கேட்டைத் தாண்டியஉடன் 'பஞ்சாவதி' என்றொரு தாபா போன்ற உணவகம் இருக்கிறது.  நல்ல ஸ்பைசியாக சாப்பிட விரும்பினால் இங்கு சாப்பிடலாம். ஒரு சிக்கன் பிரியாணி 75 ரூபாய்தான்(!). ரோட்டி, நான் போன்றவைகள் விலை குறைவுதான், ஆனால் சைட் டிஸ்களில் காசு பார்த்துவிடுகிறார்கள். அமுல் ஐஸ்கிரீம் கிடைக்கிறது.  இதைவிட்டால் இரண்டு, மூன்று ரெஸ்டாரண்டுகள் வழியில் இருக்கிறது, மலைக்கு மேல் மயூரா என்ற அரசு உணவு விடுதியும் (வெஜ்) இருக்கிறது.

எப்போது போகலாம்?
வருடம் முழுக்க போகலாம் என்றாலும், குளிர் காலங்களில் மிக அருமையாக இருக்கும். பிற நாட்களில் அதிகாலை செல்வது நன்றாக இருக்கும், மலையின் மேல் 5 மணிக்கு இருப்பது போல் சென்றால், சூரிய உதயத்தையும், அழகான அதிகாலைப் பனிமூட்டத்தையும் பார்த்து ரசிக்கலாம். அதிகாலை 5 மணி என்பதெல்லாம் நள்ளிரவு என்று என்னைப்போல சொல்பவர்கள் Google Imagesல் படம் பார்த்து ரசிக்கலாம் :-).


ஒரு சிறு குழுவாக நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ ஒரு நாள் பயணமாக சென்று வருவதற்கு ஏற்ற இடம்.


அடுத்த ஊர்சுற்றியில் குரங்கணி (தேனி மாவட்டம்).

- ஷோபன்

2 comments:

DrPKandaswamyPhD said...

என்ன அநியாயம் பாருங்கள், இன்னும் ஒரு கமென்ட் கூட வரவில்லை. மக்கள் தேர்தலில் ரொம்பவும் மூழ்கி விட்டார்கள் போல இருக்கிறது.

நல்ல பிக்னிக். நானும் போயிருக்கிறேன்.

ஷோபன் said...

வாங்க சார், வருகைக்கு நன்றி. நீங்களும் நந்தி ஹில்ஸ் பிக்னிக்கை நன்றாக அனுபவித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு சுவாரஸ்யமாக ஒன்றும் இல்லை, 70 கி.மீ. தூரத்தை கடப்பதற்கு 3 மணி நேரம் கார் ஓட்டியதைத் தவிர - அவ்வளவு டிராபிக் நெரிசல் - வாழ்க பெங்களூர் :-)