28 November, 2006

6. உயரே பறக்கும் 'ஈ'

தேசிய விருது பெற்ற 'இயற்கை' திரைப்படத்தின் இயக்குனர் ஜனநாதன் இயக்கிய இரண்டாவது படம். ஒரு சிக்கலான, கீழ் மட்டத்திலிருப்பவர்களுக்கு எளிதில் புரியாத ஒரு விசயத்தை, மிகத் தெளிவாக, மசாலாக் கலவைகளோடு, ஆபாசக் கலப்பின்றி, இரட்டை அர்த்த வசனங்கள் இன்றி எல்லோருக்கும் புரியும் படி கதை சொல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்.

கதை, கதைக்களம், அதை சொன்ன விதம் இவற்றிற்காகவே இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த படத்திற்காக மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்:

1. இப்படிப்பட்ட ஒரு கதையை இந்த மாதிரி எளிமையாகவும் சொல்ல முடியும் என்று காட்டிய இயக்குனர். மிகச்சிறந்த பாத்திரப் படைப்புகள் (ஈ, நெல்லை மணி), இதற்காகவும் தாராளமாக பாராட்டலாம்.

2. இயக்குனரின் மனதில் உள்ளதை அப்படியே திரையில் காட்ட உதவிய ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனர்.

3. சினிமாத் துறையில் 'இமேஜ்' என்று சொல்வார்களே, அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் 'ஈ'யாக நடித்த ஜீவா மற்றும் நெல்லை மணியாக நடித்த பசுபதி.

இன்னும் நிறைய எழுதலாம், ஆனால் திரையில் பாருங்கள்.

கதை, வசனம், இயக்கம்: ஜனனாதன்
திரைக்கதை: கல்யாண கிருஷ்ணன்
ஒளிப்பதிவு: ஏகாம்பரம்
எடிட்டிங்: விஜயன்
இசை: பறீகாந்த் தேவா
கலை: செல்வகுமார்

மேலதிக விபரங்களுக்கு: www.ethefilm.com

25 November, 2006

5. -----\\(ஈ)//-----

தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படங்களில் "ஈ' நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேனே தவிர, இன்று தான் 'ஈ' பார்த்தேன். திரும்ப இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று என்னை தூண்டிய படம். வழக்கமான தமிழ் படங்களில் இருந்து வித்தியாசப்பட்ட படம். இந்த படத்தைப் பற்றி விரிஈஈஈவான கருத்துக்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

20 November, 2006

4. டேயமைனா...டேயாலோசை

பொதுவாகவே கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவற்றில் பாடுபவர்களுக்கென்றே பிரத்யேகமான குரல் வாய்த்திருக்கிறது. எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம், இவர்களின் உண்மையான குரலே இப்படித்தானா அல்லது வழி வழியாகவே ஒருவர் பாடுவதின் பாதிப்பு மற்றவர்க்கும் தொற்றி அதனால் அவர்களும் அப்பிடி பாடுகிறார்களா என்று தெரியவில்லை.

ஒரு உதாரணத்திற்கு, பருத்தி வீரன் -ல் வரும் 'டங்கா டுங்கா தவிட்டுக்காரி' பாடலில் ஐந்து பேர் பாடியிருக்கிறார்கள். அனைவருக்குமே தட்டையான சற்றே முரட்டுக் குரல்.

"டேயமைனா டேயமைனா டேயமைனா டேயாலோசை
டேயமைனா டேயமைனா டேயமைனா டேயாலோசை" - என்ற பகுதியையும் (இதற்கு என்ன அர்த்தம்?)

"எங்கள் குல தங்கம்
தேவர் குல சிங்கம்
அருள் முத்து ராமலிங்கம்" - என்ற பகுதியையும் கேட்டால் இதை உணர முடியும்.

என்னதான் அவர்களின் பாடல்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கும், சற்றே நெளிய வைக்கும் வார்த்தைகள் இருந்தாலும், அந்த குரல்களில் தெறிக்கும் வலியும், வேதனையும், வறுமையும், ஏக்கமும் நெஞ்சை பிசைபவையாகவே இருக்கின்றன.

இவர்கள் மட்டும் அல்ல, ரயிலில் மற்றும் தெருவில் பாடி பிழைப்பு நடத்துபவர்கள், லேகியம் விற்பவர்கள், பல்வேறு பொருட்களை ஏலம் விடுபவர்கள் (பிதாமகன் சூர்யா கதாபாத்திரம் போல்), ரயில் நிலையங்களில் காபி, தேனீர் விற்பவர்கள் போன்றோர்களுக்கும் தனிப்பட்ட குரல் ஈர்ப்பு இருக்கிறது.

ரயிலில் பாடி யாசகம் கேட்கும் விழியற்றோர்கள் எப்படி அவர்கள் பாடும் பாடலை தேர்ந்தெடுக்கிறார்கள்? அவர்களுக்கென்றே சில பாடல்கள் இருக்கிறதா?

"மண் குடிசை வாசலென்றால்....அய்யா கண் பார்வை தெரியாது..........உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுப்பதில்லை...அய்யா....அம்மா...கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...இவன் யாருக்காக கொடுத்தான்..."

இதைப் போலவே தெருவில் லேகியம் விற்பவர்களின் குரலைக் கேட்டாலே நின்று விடுவேன். அதென்னவோ தெரியவில்லை சின்ன வயதிலிருந்தே இவர்களின் குரல்கள் மீது தனி ஈர்ப்பு.

".......பெரியோர்களே, தாய்மார்களே, வாலிப, வயோதிக அன்பர்களே, பாருங்க சார் எங்கள் மருந்து கம்பெனியின் சார்பாக ஒரு கால் அவர் விளம்பரம் சார். பாருங்க சார் இந்த லேகியத்துல ஏழு வகையான மூலிகைகள் கலந்து இருக்கு சார். பாருங்க சார் ஆல வேரு, அங்க வேரு, புங்க வேரு, புருச வேரு, நின்னு அடிக்கிற நீல வேரு, காக்கைக் கருங்குடல், கண்ணில்லாத சிட்டுக்குருவி. பாருங்க இப்பிடி பல அரிய அரிய மூலிகைகள் ....."

எனக்கு எப்போதுமே இந்த மாதிரியான குரல்கள் மிக விருப்பமானவையாகவே இருந்திருக்கிறது. அவர்களும் என்னதான் செய்வார்கள், வயிற்றைக் கழுவ என்னவெல்லாமோ செய்யவேண்டியிருக்கிறது. விதியின் பாடலுக்கு ஆட வேண்டியிருக்கிறது.

".....டேயமைனா டேயமைனா
டேயமைனா டேயாலோசை
டேயமைனா டேயமைனா

டேயமைனா டேயாலோசை......"

19 November, 2006

3. டங்கா டுங்கா தவிட்டுகாரி

இன்று தான் பருத்தி வீரன் பாடல்கள் கேட்டேன். நன்றாகவே செய்திருக்கிறார்கள். இதில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் டங்கா டுங்கா தவிட்டுகாரி. கிராமங்களில் இருந்து வந்தவர்களுக்கு இந்த பாடல் கண்டிப்பாக பிடிக்கும்.


இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியிருப்பவர்கள்: பாண்டி, லக்ஷ்மி, ராஜா, சரோஜா, கலா

இந்த பாடலில் சிறப்பான விசயமே, தொழில் முறை பிண்ணணிப் பாடகர்களைத் தவிர்த்து கலைக் குழுவைச் சேர்ந்தவர்களையே பாட வைத்ததுதான். பொதுவாக இவர்களுக்கென்றே தனிப்பட்ட குரல் வாய்த்திருக்கிறது. இதைப் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக எழுதலாம். கேட்டுப்பாருங்கள், கண்டிப்பாக ஆட ஆரம்பித்து விடுவீர்கள்.
இதைத் தவிர ஊரோரம் புளியமரம் பாடலும் அருமை.
பாடியிருப்பவர்கள்: பாண்டி, லக்ஷ்மி, சரோஜா, கலா
கேளுங்கள், மண் வாசணையை அனுபவியுங்கள்.

2. புள்ளி ராஜாஎன்னோட கணிணியில் எதையோ தேடும் போது கிடைத்த 'புள்ளி ராஜா'வின் படம்.

1. முதல் படி


அப்பாடா! நானும் ஒரு வழியா கிறுக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா தடவி தடவி தமிழ்ல டைப் பண்றதுக்குள்ள தாவு தீந்து போகுது. என்ன பண்றது, நானும் வெட்டியாதான் இருக்கேன்கிறத இப்பிடியெல்லாம் காட்ட வேண்டி இருக்கு.
பெயர் காரணம்:
சொந்த பேர்ல 'ப்ளாக்க'லாம்னா ஏற்கனவே பதிவு பண்ணிட்டாங்க. வேற என்ன பேர்ல ஆரம்பிக்கலாம்னு நான் உக்காந்து யோசிச்சா 'நான்' தவிற வேற ஒன்னும் தோணல.

என்னைப் பற்றி:
தற்போது சென்னையில் ஆராய்ச்சி மாணவன்.

இத டைப் பண்றதுக்குள்ளயே கண்ண கட்டுதே, இன்னைக்கு இது போதும்.

வணக்கம்.