30 December, 2006

15. அனுவின்றி ஓர் அணுவும்

ஒரு முக்கியமான டிஸ்கி:
ஒரே உச்சரிப்பைக் கொண்டிருக்கும் வேறு வேறு வார்த்தைகளைப் பற்றி யோசித்து கொண்டிருக்கும் போது தோன்றியது இது.
ஒருவேளை எனக்கு ஒரு காதலி இருந்து அவளுக்கு அனு என்று பெயரும் இருந்தால்...எப்படி என் லாவகமான சிந்தனை :-)
------------------------------------------------------------
அவனின்றி
ஓர் அணுவும்
அசையாது
அது சரி

ஆனால் எனக்கு
அனுவின்றி
ஓர் அணுவும்
அசையாதே.
-----------------------------------------
அனு ஒருமுறை
என்னிடம் கேட்டாள்
"நான் குண்டானா
உனக்குப் பிடிக்குமா?"

நான் சொன்னேன்
"அய்யோ வன்முறை
வேண்டாம், எனக்கு
அனுகுண்டுனா பயம்".

அப்போது வெடித்துக்
கிளம்பிய சிரிப்பில்
சிதறிப் போனவன்தான்
நான்.
---------------------------------------
அணுக்களால் ஆனது
உலகம் - இது அறிவியல்

அனுவால் ஆனது
நான் - இது காதல்
---------------------------------------
அணுக்கதிர் வீச்சிலிருந்து
கூட தப்பிவிடலாம்
ஆனால் அனு-கண்
வீச்சிலிருந்து...
--------------------------------------
"அணு அறிவியல்
தெரியுமா உனக்கு?"
என்றாய் நீ.

"அனு அறிவியல்
தான் தெரியும்"
என்றேன் நான்.

வெட்கத்தில்
சிரித்தாய் நீ.

அப்போது என்மனதில்
நிகழ்ந்தது தான்
அனுக்கரு சிதைவு.
----------------------------------------
எலெக்ட்ரான்கள் எல்லாம்
அணுக்கருவைச் சுற்றிச்
சுற்றி வருமாம்

நான் அனுவை
சுற்றிச் சுற்றி
வருவதைப் போல.
---------------------------------------

22 December, 2006

14. இந்த விசயம் கடவுளுக்குத் தெரியுமா?

ராமரும் பாபரும்

எஞ்சாமி பெருசா
ஓஞ்சாமி பெருசா
வா பார்த்துப்புடலாம்

முட்டிக் கொண்டன
அறிவிலிகள்
உடைந்தன கோவில்கள்
நொறுங்கியது மசூதிகள்

லேய்...யார்ரா அது
முக்காடு போட்டு போறது
அட நம்ம
ராமரும் பாபரும்
--------------------------------------------
இந்த விசயம் கடவுளுக்குத் தெரியுமா?

கடவுளைப் பார்க்க
கியூ வரிசை

சாதா தரிசனம்
இலவசம்
ஸ்பெசல் தரிசனம்
10 ரூபாய்

ஏனுங்க இந்த விசயம்
கடவுளுக்குத் தெரியுமா?
---------------------------------------------

19 December, 2006

13. இது கதையல்ல கதை

சென்ற ஞாயிற்றுக்கிழமை கார்ட்டூன் சேனல் பார்த்துக் கொண்டிருந்த போது கண நேரத்தில் உருவானது இந்த கதையின் கரு.
-------------------------------------------------------------------------
இது கதையல்ல கதை

ஒரு நாள் என் நண்பன் சரவணன் ரொம்ப அவசரமா என் இன்னொரு நண்பன் ரவிய தேடி வந்தான். அப்ப நானும் ரவியும் அவன் வீட்டு மாடில ஒக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். சரவணன் ஒரு டைரக்டர்கிட்ட அசிஸ்டண்டா வேலை செய்றான். அதாவது உதவி இயக்குனர்.

"வாடா சரவணா! என்னடா ரொம்ப நாளா ஆளையே காணோம்?".

"இல்ல மச்சான்! வேலை ரொம்ப அதிகமாயிருச்சு, புது இடம், புது டைரக்டரு, வேலை பெண்டெடுக்குறாங்கடா".

"என்ன கொடுமை சரவணன் இது".

"டேய், எனக்கேவா?".

"அப்புறம் சொல்லு மச்சி, என்ன விசேசம்? என்னங்கிறாங்கெ உங்க சினிமா மக்கள்?"

" நான் வந்ததே வேற ஒரு விசயமா. எனக்கு நீதான்டா ரவி ஒரு உதவி பண்ணனும்".

"சொல்டா என்ன வேணும்?"

"டேய் எனக்கு ஒரு கதை வேணுன்டா..."

"என்னாது கதையா?" ரவி அதிர்ச்சியா சரவணன பார்க்க, நான் ஒன்னுமே புரியாம அவிங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.

"ஆமாடா ரவி. உனக்கே தெரியும், ரொம்ப நாள் நாயா பேயா அலைஞ்சு இப்பதான் இந்த சான்ஸ் கிடைச்சிருக்கு. நான் வேற புதுசா, எழவு எல்லா வேலையயும் என் தலையில கட்டிர்ராங்க. டீ வாங்கி குடுக்கிறதுல ஆரம்பிச்சு எல்லா வேலையும் நாந்தேன் பண்ணனும்".

"ம்ம்....அதுக்கு?".

"டைரக்டரு புது படம் ஆரம்பிச்சிட்டாரு. நாளைக்கு சூட்டிங் போறோம். அதுக்குள்ள அவரு எதிர் பாக்கிற மாதிரி ஒரு கதை வேணுமான்டா. நீதாண்டா ஏற்பாடு பண்ணனும்".

"டேய் என்னாடா, பஸ்ல ஏறி தி. நகருக்கு ஒரு டிக்கெட் வேணுன்னு சொல்ற மாதிரி சொல்ற, கதைக்கு நான் எங்கடா போவேன்" கடுப்பான ரவி மேலும் "டேய் எனக்கு தெரிஞ்சதெல்லாம் பாட்டி வடை சுட்ட கதைதான், ஏண்டா உனக்கு ஏதும் தெரியுமாடா?" என்று என்னை பார்த்து கேட்டான்.

"டேய் என்னதான்டா பேசிக்கிறீங்க, எனக்கு ஒன்னுமே புரியலயே, இப்பவே கண்ண கட்டுதேடா."

ரவியும் நானும் கடுப்பு ப்ளஸ் புரியாமல் சரவணணைப் பார்க்க, அவன் அதை விட குழப்பமா எங்களை பார்த்தான்.

ரவி, "ஏண்டா இப்பிடிதான் ரொம்ப நாளா படம் எடுக்குறாங்களா, ஏண்டா சூட்டிங் போன பிறகுதான் கதை என்னான்னு உக்காந்து யோசிப்பாங்கெளா, வெளங்கிரும்டா தமிழ் சினிமா".

"டேய் டேய், என்னாடா பேசுறீங்க, ஏண்டா கதை கூட இல்லாமயாடா சூட்டிங்க்குக்கு போவோம். நான் சொல்றது கதை இல்லடா...கதை".

"என்னாது கதையில்ல ஆனா கதையா. டேய் நேத்து வரைக்கும் நல்லாத்தானடா இருந்த. என்னடா ஆச்சு?", இது ரவி.

"அய்யய்யய்ய! வெண்ணைகளா!! கதைடா கதை...க...தை...பழைய சாமி படங்கள்ல எல்லாம் வச்சிருப்பாங்களே, அட மகாபாரதத்துல பீமன் தோள்ள சாச்சு வச்சிருப்பாரே, அட அனுமார் கூட கைல வச்சிருப்பாருல்லடா. கதைடா கதை".

"ஓ! அந்த கதையா. ஏண்டா சொல்லவேயில்ல....என்னாதிது சின்னப்புள்ளத்தனமா இருக்கு...ராஸ்கல்".

"டேய் ரவி! உங்க மாமா ஒருத்தரு சினிமாவுக்கான கலைப் பொருட்கள் எல்லாம் வாடகைக்கு விடுற கடை வச்சிருக்காருதான. அதான் உன் மூலமா கதை வாங்கலாம்னு...."

"அடப்பாவி, நல்லா கெளப்புராங்கையா பீதிய!......."



[Image from www.indiafm.com]

12 December, 2006

12. தலைவருக்கு பிறந்த நாள்

12-12-2006

தலைவருக்கு பிறந்த நாள்!!!
என்னென்னவோ எழுத வேண்டுமென்று நினைத்தேன். தலைவரைப் பற்றி நினைத்தாலே (இனிக்கும்) பரவசத்தில் ஒன்றும் தோன்றவில்லை. வேறென்ன,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா!!!












11 December, 2006

11. பிடிமானமில்லாமல் சிறுநீர் கழிக்கும் திறன்

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வேலை செய்யும் போதோ அல்லது எதையாவது பார்க்கும் போதோ சட்டென்று சில பாடல்களோ அல்லது கவிதையோ நினைவிற்கு வரும். அது அந்தச் சந்தர்பத்திற்குப் பொருத்தமாகவோ அல்லது பொருத்தமற்றோ கூட இருக்கலாம்.

அதே போல் எனக்கு தினமும் குளிக்கும் போது வைரமுத்துவின் இந்த கவிதை நினைவிற்கு வரும்.

"குளிக்கும் வரை நினைவிருக்கும்
குளிக்கும் போது மறந்தே போகும்
காது மடல் தினம் கழுவியதில்லை"

இதே போல் ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் கழிப்பறையை உபயோகிக்கும் போது இது நினைவிற்கு வரும்.

"ஓடும் ரயிலில் பிடிமானமில்லாமல்
சிறு நீர் கழிக்கும் திறனுமில்லை"


(இதற்கு கலைஞர் கருணாநிதி தன் முன்னுரையில் கேலியாக " நல்ல வேளை கவிஞர் எந்த பிடிமானம் என்று சொல்லவில்லை" ;-)).

மேலே குறிப்பிட்ட இரண்டுமே ஒரே கவிதையில் வரும் இரு வேறு பத்திகள். கவிஞர் இதே போல் தன்னுடைய பல குறைகளைச் சொல்லிக்கொண்டே போய் "இவ்வளவு குறைகள் இருந்தும் என்னுள் எப்படி நிறைந்து வழிகின்றாய் தமிழே" என்பது போல் முடிப்பார் (பார்க்க: வைரமுத்து கவிதைகள் அல்லது இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்று நினைக்கிறேன் மேலும் மிகச் சரியாக வார்த்தைகள் நினைவில் இல்லை, மன்னியுங்கள்).

இதே போல் உங்களுக்கு சில பல சந்தர்ப்பங்களில் ஏதேனும் நினைவிற்கு வருவதுண்டா?

07 December, 2006

10. சற்றே பெரிய பின்னூட்டம் to செந்தழல் ரவி

இது செந்தழல் ரவியின் பதிவுக்கு என்னுடைய சற்றே பெரிய பின்னூட்டம். ரவியின் பதிவுக்கு கீழே க்ளிக்குக.
http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_07.html

ரவி அண்ணே,

அபத்தத்திலிலேயே பெரிய அபத்தம் தமிழ் சினிமாவில இருக்கிற அபத்தத்தை லிஸ்ட் பண்ண சொன்னதுதான், இதுக்கெல்லாம் ஒரு பின்னூட்டம் பத்தாது, தனி வலைப்பூ ஆரம்பிச்சு தினம் ஒரு பதிவு போடலாம். இருந்தாலும் உங்களுக்காகவும், தமிழ் கூறும் நல்லுலகத்திற்காகவும்...

1. வில்லன் கெலிகாப்டர்ல போனாலும், இவரு வில்லன துரத்திக்கிட்டே ஓடிப்போயித்தான் பிடிப்பாராம், யாரு நம்ம ஈரோவாகப்பட்டவர் தான்.

2. வில்லன் முன்னாடி ஜீப்லயோ, வேன்லயோ ஈரோயினாகப் பட்டவளையோ, அம்மாவயோ கடத்திக்கிட்டு போவாராம், இவரு பின்னாடியே ஓடும் போது, ஒரு புண்ணியவான் இவருக்காகவே புல்லட் நிறைய பெட்ரோல் போட்டு, சாவியோட மரத்தடில வச்சிட்டு உச்சா போயிக்கிட்டே இருப்பாரு, இவரு நோகாம எடுத்துக்கிட்டு போவாராம். (ஏண்டா டேய்! உங்களுக்கெல்லாம் வண்டியில பெட்ரோலே தீராதா, டிராபிக் போலீஸ் பிடிச்சு லைசன்ஸ், ஆர்.சி. புக் செக் பண்ண மாட்டாங்களா).

3. அட இது கூட பரவாயில்ல, இவரு பைக்ல வேகமா போறாராம், அப்பிடியே குனிஞ்சுக்கிட்டு....உர்ர்ர்ர்னு ஆக்ஸிலேட்டரை முறுக்குவாரு (ஏதோ பெரிசா ஏரோபாயில் ஷேப்ப கிரியேட் பண்ணி ஓட்டுரதா நெனப்பு).

4. இதுவும் போன பாயின்ட்டோட சேந்ததுதேன். இவரு வேகமா போறத காட்டுறதுக்கு, அடிக்கடி கியர் மாத்துரதை காமிப்பாங்கெ. (ஏண்டா! நல்லா வேகமா போற வண்டில எதுக்குடா கியர நோண்டிட்டிருக்க). டாப் ஸ்பீடுல போறார்ங்கிறதை ஸ்பீடாமீட்டர வேற க்ளோசப்ல காட்டுவாங்கெ. அப்பப்பாத்து ஒரு கண்டெயினர் லாரி கரெக்ட்டா குறுக்கால போகும், நல்லா கெளப்புராங்கப்பா பீதிய.

5. ஓகே, இனி சென்டிமெண்ட்ஸ். ஆசுபத்திரி ஆபரேசன் தியேட்டர் வாசல்ல குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துக்கிட்டு இருப்பாங்க, பெருசா கண்ணாடி போட்ட டாக்டர் வந்து கண்ணாடிய மெதுவா கழட்டிக்கிட்டே "சாரி! நாங்க எவ்வளவோ....." (ஆமா கண்ணாடி போடாத டாக்டர் எத கழட்டிக்கிட்டே சொல்லுவாரு).

6. ஆக்ஸிடன்ட்லயோ, எதுலயோ மாட்டின ஒருத்தன தூக்கிக்கிட்டு ஆசுபத்திரிக்கு கொண்டு போனா கண்டிப்பா இந்த ரெண்டுல ஒரு டயலாக் தான்..
a. ஒரு அரைமணி நேரம் லேட்டாயிருந்தாக் கூட எங்களால காப்பாத்தியிருக்க முடியாது.
b. ஒரு ஒன் அவர் முன்னாடி கொண்டு வந்திருந்தீங்கன்னா...(டேய் ஆக்ஸிடென்டே கால் மணி நேரத்துக்கு முன்னாடிதான்டா ஆச்சு).

7. அவசரமா ரத்தம் சொட்டச் சொட்ட ஸ்டெரச்சர்ல வச்சு, ஆப்பரேசன் தியேட்டருக்கு கொண்டு போவாங்க, ஒரு நர்ஸ் வந்து "எல்லாரும் வெளிய இருங்க"னு சொல்றதக்கூட கேக்காம ஈரோவோ, ஈரோயினியோ உள்ள போக டிரை பண்ணுவாங்க, என்னமோ அவிங்களே போயி ஆப்புரேசன் பண்ணப்போறது மாதிரி.

8. ஈரோயினி ஈரோவப் பாத்து ஒன்னுந்தெரியாத பட்டிக்காட்டான்னு சொன்ன பிறகுதான் ஈரோ அவரோட ரெபிடெக்ஸ் ஆங்கில புலமையை கால் மணி நேரத்துக்கு தம் கட்டி பேசிக்காட்டுவாரு. அதுவும் இங்கிலிபீசுல பேசிட்டா புத்திசாலியாம், ஏன்... ரிலேட்டிவிட்டி தியரிய விளக்குறது.

9. ஈரோ 'தண்ணி'யடிச்சா அவரு சோகத்துல இருக்காராம், வேற யாராவது தண்ணியடிச்சா "ச்சீ...பொறுக்கி நாயி"னு ஈரோயினி திட்டுவாங்க.

10. ஈரோயின் மேல ஈரோ தெரியாம மோதிட்டா " நீயெல்லாம் அக்கா, தங்கச்சி கூட பொறக்கல"னு கண்ணகியோட கசின் சிஸ்டர் மாதிரி கேப்பாங்க. ஆனா ஈரோ மேல ஈரோயினி தெரிஞ்சே மோதினாலும் " நீயெல்லாம் அண்ணன், தம்பி கூட பொறக்கல"னு கேக்கமாட்டாரு.

11. பொண்ணுண்னா அடக்கமா இருக்கனும், அமைதியா இருக்கனும்னு சொல்லி முடிச்ச அடுத்த சீன்லயே இம்மினிக்கூண்டு டிரஸ் போட்ட ஈரோயினி கிட்ட போயி 'வருவியா...வரமாட்டியா'னு கெஞ்சிக் கூத்தாடி குத்து டான்ஸ் போட்டுக்கிட்டு இருப்பாரு.

12. ஈரோவுக்கு ஒலகத்துல தெரியாத விசயமே கிடையாது, எல்லா இசைக்கருவிகளையும் வாசிப்பாரு, எல்லாவிதமான வண்டிகளையும் ஓட்டுவாரு, டைம்பாம்ல கரெக்ட்டா வயர கட் பண்ணுவாரு, வீட்ல அம்மாக்கு சமையல்ல உதவுவாரு, துப்பாக்கி சுடுவாரு, கத்தி சுத்துவாரு, வர்மக்கலைல இருந்து டேக் ஒன் வரைக்கும் தெரியும், தீவிரவாதிகளை கண்டுபிடிக்க அரசாங்கமே இவரதான் கெஞ்சி கேக்கும், ஊருக்கே அறிவுரை சொல்றேங்கிற பேர்ல மொக்கயப் போடுவாரு, ஒண்ணுந்தெரியாத கிராமத்து மக்கள் முன்னாடி, கலெக்டர்கிட்டயோ இல்ல திமிர் பிடிச்ச ஈரோயின் முன்னாடியோ தன்னோட ஆறு வருசம் அரியர் வச்சு முடிச்ச இங்கிலிபீசு அறிவ காட்டுவாரு......................................................ஆனா அவங்கம்மாவ வில்லன் எப்ப கடத்துவான்னு தெரியாது. வில்லன் கடத்த வரும்போது இவுரு தனியா தேமேன்னு யாருமே இல்லாத கடையில ஷாப்பிங் பண்ணிக்கிட்டிருப்பாரு.

அடப் போங்கப்பா, இதெல்லாம் ஒரு நாள்ல எழுதி முடிக்கிற காரியமா? இத எழுதுறதுக்கு பதிலா ராமஜெயம் எழுதியிருந்தாக் கூட புண்ணியம் கெடச்சிருக்கும்.

இதையெல்லாம் விட பெரிய அபத்தம் கீழே. தயவு செய்து இளகிய மனம் கொண்டவர்கள் இதற்கு மேலே செல்ல வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அதுக்கு மேல ஒங்க இஸ்டம்.


...



...




...




...





...













இடுக்கண் வருங்கால் நகுக....வேறென்ன பண்றது.


06 December, 2006

9. 'கார்த்திக்'குகள் பலவிதம்

'கார்த்திக்'குகள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒருவிதம்

ஒரு குட்டி அறிவிப்பு:
இந்த பதிவு யாரையும் கேலி செய்வதற்காகவோ, புண்படுத்துவதற்காகவோ இல்லை. பள்ளி, கல்லூரிப் பருவ நாட்களில் நாம் எப்படியெல்லாம் சுவாரஸ்யமாக வாழ்ந்தோம் என்பதின் ஒரு சிறு பகுதி.

--------------

ஒவ்வொருவருக்கும் அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் ஒரே பெயர் கொண்ட பல நண்பர்கள் இருந்திருப்பார்கள். பொதுவாகவே சில பெயர்கள் பரவலாக இருக்கும், அவை சற்றே பழைய பெயர்களோ அல்லது புதிய/மாடர்ன் பெயர்களோ, அவை எல்லோருக்கும் பிடித்தமானவையாகவோ அல்லது அழைப்பதற்கு எளிதாகவோ இருக்கும். (பழைய: முருகன், ராஜா, கண்ணன்..., புதிய/மாடர்ன்: சதீஷ், அஜய், அருண்....).
..
ஒரே பெயருடைய நண்பர்களை வித்தியாசப்படுத்திக் கூப்பிட அவர்களை பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவோம் (ஆமாம் பெரிய பட்டம், ஆக்ஸ்போர்ட் ஸ்கூல் பட்டம்...). நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது இரண்டு குமரேசன்கள் இருந்தார்கள். ஒருவன் 'குட்டை' குமரேசு, இன்னொருவன் நெட்டை குமரேசு, கல்லூரியில் ஒருவர் 'கும்மாண்டி' குமரேசு. இவர்களை இவர்களின் சொந்த பெயர் சொல்லி அழைப்பதை விட பட்டப்பெயர் சொல்லி அழைக்கும்போது இன்னும் நெருக்கமாகவே உணர்ந்திருக்கிறோம்.
..
இப்படி எனக்கு கார்த்திக் என்ற பெயரில் பல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு எப்படி அந்த பட்டப்பெயர் வந்தது என்று கூட எனக்குத் தெரியாது.

பள்ளியில்:
'விரிச்சு' கார்த்தி - (Virtue-னா என்னடா என்று அர்த்தம் கேட்டான், மருவி விரிச்சு என்றாகிவிட்டது)
'யமகா' கார்த்தி - (பள்ளிப்பருவத்தில் Yamaha RX 100 வைத்திருந்த ஒரே நண்பன்)
'பௌலிங்' கார்த்தி - (கரெக்ட்டாக first slip ல் இருப்பவனுக்கு பௌலிங் போடுவான் :-))
..
கல்லூரியில்:
'சைக்கு' கார்த்தி - (சைக்கோ என்பது நாளடைவில் இப்படி ஆகிவிட்டது)
'மாமா' கார்த்தி - (இனிஷியல் M.A.M.A. என்றிருப்பது ஒரு குறையா)
'மண்டை' கார்த்தி - (நல்லா படிக்கிற மண்டையன்)
'வணக்கம்' கார்த்தி - (யாரைப் பார்த்தாலும் வணக்கம் சொல்வார்)
'ரம்பா' கார்த்தி - (கொஞ்சம் குண்டா, தொடை பெருசா இருந்திரக்கூடாதே :-p)
'பெருசு' கார்த்தி - (கொஞ்சம் வயதில் பெரியவர்)
'போண்டா' கார்த்தி - (எதற்கும் வாயை திறக்கவே மாட்டான், "ஏண்டா வாயில என்னா போண்டாவா வச்சிருக்க" என்ற நாளில் இருந்து)
'கார்' கார்த்தி - (கார் வைத்திருந்த நண்பன்)
'டுபுக்கு' கார்த்தி - (இதற்கு பெயர்க்காரணம் வேறா)
.
சிலரை பெயர் மற்றும் பட்டத்தோடு சேர்த்து சொன்னால்தான் தெரியும். சிலருக்கு பட்டம் தேவையில்லை பெயர் மட்டும் போதும். 'வணக்கம்' கார்த்தி என்று சொன்னால்தான் அவன் தான் இவன் என்று தெரியும். ஆனால் 'கில்மா' கிரி-யை 'கில்மா' என்று சொன்னாலே தெரியும்.
.
இவனிடம் ஒரு முறை கேட்டேன் "ஏண்டா! எல்லாரும் உன்ன கில்மா கிரி, கில்மா கிரின்னு கூப்பிடுறாங்களே, கிரி-ங்கறது உன் பேரு, கில்மாங்கிறது நீ படிச்சு வாங்குன பட்டமாடா?" இதற்கு அவன் பார்த்தானே ஒரு பார்வை இன்னும் மனதில் இருக்கிறது.
.
ஆனாலும் எனக்குத் தெரிந்து இன்றுவரை ஒருவர் கூட என்னை இந்த பேர் சொல்லி அழைக்காதே என்று சொன்னதில்லை. உண்மையில் பெயரில் என்ன இருக்கிறது, பெயர் வெறும் பெயர்தானே.
.
உங்களுக்கும் இதே போல் 'பட்டம்' பெற்ற நண்பர்கள் இருக்கிறார்களா?

8. டேயமைனா... டேயாலோசை

பொதுவாகவே கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவற்றில் பாடுபவர்களுக்கென்றே பிரத்யேகமான குரல் வாய்த்திருக்கிறது. எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம், இவர்களின் உண்மையான குரலே இப்படித்தானா அல்லது வழி வழியாகவே ஒருவர் பாடுவதின் பாதிப்பு மற்றவர்க்கும் தொற்றி அதனால் அவர்களும் அப்பிடி பாடுகிறார்களா என்று தெரியவில்லை.


ஒரு உதாரணத்திற்கு, பருத்தி வீரன் -ல் வரும் 'டங்கா டுங்கா தவிட்டுக்காரி' பாடலில் ஐந்து பேர் பாடியிருக்கிறார்கள். அனைவருக்குமே தட்டையான சற்றே முரட்டுக் குரல்.
"டேயமைனா டேயமைனா டேயமைனா டேயாலோசை
டேயமைனா டேயமைனா டேயமைனா டேயாலோசை"
- என்ற பகுதியையும் (இதற்கு என்ன அர்த்தம்?)

"எங்கள் குல தங்கம்
தேவர் குல சிங்கம்
அருள் முத்து ராமலிங்கம்"
- என்ற பகுதியையும் கேட்டால் இதை உணர முடியும்.

என்னதான் அவர்களின் பாடல்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கும், சற்றே நெளிய வைக்கும் வார்த்தைகள் இருந்தாலும், அந்த குரல்களில் தெறிக்கும் வலியும், வேதனையும், வறுமையும், ஏக்கமும் நெஞ்சை பிசைபவையாகவே இருக்கின்றன.

இவர்கள் மட்டும் அல்ல, ரயிலில் மற்றும் தெருவில் பாடி பிழைப்பு நடத்துபவர்கள், லேகியம் விற்பவர்கள், பல்வேறு பொருட்களை ஏலம் விடுபவர்கள் (பிதாமகன் சூர்யா கதாபாத்திரம் போல்), ரயில் நிலையங்களில் காபி, தேனீர் விற்பவர்கள் போன்றோர்களுக்கும் தனிப்பட்ட குரல் ஈர்ப்பு இருக்கிறது.
..
ரயிலில் பாடி யாசகம் கேட்கும் விழியற்றோர்கள் எப்படி அவர்கள் பாடும் பாடலை தேர்ந்தெடுக்கிறார்கள்? அவர்களுக்கென்றே சில பாடல்கள் இருக்கிறதா?

"மண் குடிசை வாசலென்றால்....
அய்யா கண் பார்வை தெரியாது..........
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுப்பதில்லை...
அய்யா....அம்மா...கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...
இவன் யாருக்காக கொடுத்தான்..."
..
இதைப் போலவே தெருவில் லேகியம் விற்பவர்களின் குரலைக் கேட்டாலே நின்று விடுவேன். அதென்னவோ தெரியவில்லை சின்ன வயதிலிருந்தே இவர்களின் குரல்கள் மீது தனி ஈர்ப்பு.
..
".......பெரியோர்களே, தாய்மார்களே, வாலிப, வயோதிக அன்பர்களே, பாருங்க சார் எங்கள் மருந்து கம்பெனியின் சார்பாக ஒரு கால் அவர் விளம்பரம் சார். பாருங்க சார் இந்த லேகியத்துல ஏழு வகையான மூலிகைகள் கலந்து இருக்கு சார். பாருங்க சார் ஆல வேரு, அங்க வேரு, புங்க வேரு, புருச வேரு, நின்னு அடிக்கிற நீல வேரு, காக்கைக் கருங்குடல், கண்ணில்லாத சிட்டுக்குருவி. பாருங்க இப்பிடி பல அரிய அரிய மூலிகைகள் ....." எனக்கு எப்போதுமே இந்த மாதிரியான குரல்கள் மிக விருப்பமானவையாகவே இருந்திருக்கிறது.
..
அவர்களும் என்னதான் செய்வார்கள், வயிற்றைக் கழுவ என்னவெல்லாமோ செய்யவேண்டியிருக்கிறது. விதியின் பாடலுக்கு ஆட வேண்டியிருக்கிறது.
..
".....டேயமைனா டேயமைனா டேயமைனா டேயாலோசை
டேயமைனா டேயமைனா டேயமைனா டேயாலோசை......"

7. உங்களால் வேகமாக படிக்க முடியுமா?



உங்களால் எவ்வளவு வேகமாக படிக்க முடியுமோ, படித்துப் பாருங்கள் நண்பர்களே!!