31 March, 2011

இந்த வாரம் - 02 April 2011

ரசித்த புகைப்படம்

இந்தியா-ஆஸ்திரேலியா உலகக்கோப்பை கால்-இறுதிபார்த்த சினிமா

50 First Dates - கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்துக்கொண்டிருந்த போது, அங்குள்ள திறந்தவெளி திரையரங்கில் பார்த்தது. மீண்டும் நேற்று இரவு பார்த்தேன். Short-term memory loss-ஐ பிண்ணனியாகக் கொண்ட பல படங்களில் இதுவும் ஒன்று. லூசி-க்கும் அவரது அப்பாவுக்கும் நடந்த ஒரு கார் விபத்தில் லூசிக்கு Short-term memory loss ஏற்படுகிறது. இவருடைய ஞாபகங்கள் ஒரு நாள்தான் இருக்கும், மறு நாள் காலை நேற்று நடந்தது எல்லாம் மறந்து புதிதாய் ஆரம்பிக்கும்.


இவரை ஒரு காஃபி ஷாப்பில் சந்திக்கும் ஜொள்ளன் + வெட்டினரி டாக்டர் ஹென்றி விரும்புகிறார். லூசிக்கு இப்படி ஒரு வியாதி இருப்பது ஹென்றிக்கு பின்னர்தான் தெரியவருகிறது. ஹென்றியும், லூசியின் அப்பா மற்றும் தம்பியும் இணைந்து எப்படி லூசிக்கு இதை புரியவைக்கிறார்கள், பின் எப்படி லூசியும், ஹென்றியும் இணைகிறார்கள் என்பதை மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். லூசியாக Drew Barrymoreம், ஹென்றியாக Adam Sandlerம் நடித்தது. ஒரு ஃபீல் குட் படம்.

எந்திரன் - படம் வெளியான அடுத்த நாள் அதிகாலையே இணையத்தில் ஹிந்தி பதிப்பு கிடைத்தது. எனக்கு ஹிந்தியில் ஹிந்தி என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் தெரியாததால் படம் பார்க்கவில்லை. வெகு நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் பார்க்கக் கிடைத்தது. நான் ரஜினியின் பரம ரசிகன்தான், இருந்தாலும் எந்திரன் பெரிதாக என்னைக் கவரவில்லை. சன் பிக்சர்ஸ், ஷங்கர், ரஹ்மான், பிரபல தொழில் நுட்பக் கலைஞர்கள், ஹாலிவுட் கிராபிக்ஸ் வல்லுனர்கள்....எல்லாம் சேர்ந்து திரும்பவும் ஒரு காதல் கதையைத்தான் கொடுத்திருக்கிறார்கள். உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் வல்லுனர்களை வைத்துக்கொண்டு, ஹாலிவுட்டுக்கே சவால் என்பதும், உலகத்தரம் என்று அவர்களே சொல்லிக்கொள்வதும் அசிங்கமாக இருக்கிறது. இத்தனை தொழில் நுட்ப நேர்த்திகளையும் தமிழர்களைக் கொண்டோ அல்லது பிற இந்திய கலைஞர்களைக் கொண்டோ செய்திருந்தால், மிகப் பெருமையாக ஹாலிவுட்டிற்கே சவால் என்று சொல்லிக்கொள்ளலாம்.இவையனைத்தையும் தாண்டி எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது, ரஜினியின் உழைப்பு. இந்த வயதில் என்ன ஒரு உழைப்பு, அர்ப்பணிப்பு - Hats off! ஒரு மிகச்சிறந்த நடிகனை இப்படி கோமாளியாக ஆக்கிவிட்டார்களே என்ற வருத்தம்தான் மிஞ்சுகிறது.


படித்த புத்தகம்
இனிமேல் படித்த புத்தகங்களை தனியாக 'புத்தகம் - தலைப்பு - ஆசிரியர்' என்று தனிப்பதிவுகளாகவே போடலாமென்றிருக்கிறேன். முதல் புத்தக பதிவாக '5 Point Someone' by சேத்தன் பகத், விரைவில்.


செவிக்குணவில்லாத போது
கொஞ்சம் கிராண்டாக சாப்பிட வேண்டும், அதே சமயம் பாக்கெட்டும் பத்திரமாக இருக்கவேண்டுமா? அன்-லிமிடெடாக பலவித வெஜ், நான்-வெஜ் உணவுகள், டெசர்ட்கள் மற்றும் கூடவே அன்-லிமிடெட் பியரும் வேண்டுமா? ஆமாம்ப்பா..ஆமாம் என்றால் -

தாஜ் கேட்வே (Hotel Taj Gateway) - பெங்களூர் ரெசிடென்ஸி சாலையில், மேயோ ஹாலுக்கு எதிரே உள்ளது. இங்கு அருமையான இரவு பஃபே வெறும் ரூ.650 + Taxes க்கு கிடைக்கிறது. 10-15 விதமான ஸ்டார்டர்கள், உங்கள் டேபிளுக்கே வந்து வழங்கப்படுகிறது. அதைத் தவிர பலவித மெயின் கோர்ஸ் உணவுகள் மற்றும் விதவிதமான ஸ்வீட்கள், கேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் கூடவே பியர். தேவையெனில் வேறு காக்டெயில்களோ/ மாக்டெயில்களோ ஆர்டர் செய்து கொள்ளலாம் (இது தனி பில்..). ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித குசின்கள் - போன் செய்து விசாரித்துக் கொண்டு செல்லலாம்.

காதலியுடனோ/ குடும்பத்துடனோ சென்று, ஒரு பூல்-சைட் (Pool side) டேபிள் ரிசர்வ் செய்து கொண்டு ஆனந்தமாக ஒரு இரவு உணவை அனுபவிக்க சிறந்த இடம். (வருடத்திற்கு ஒருமுறையோ / இருமுறையோ செல்லலாம், எனக்கெல்லாம் அவ்வளவுதான் கட்டுபடியாகும் :-)).

அடுத்த வாரம் தாஜ் விவான்டா (Taj Vivanta, MG Road, Bangalore).

கொஞ்சம் அரசியல்
விஜயகாந்த் அவரது வேட்பாளரை அடித்த வீடியோ பார்த்தேன். கடுமையான தேர்தல் பிரச்சார அலைச்சலால் எவ்வளவுதான் மன அழுத்தம், உடல் நலக்குறைவு என்று எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம், ஆனாலும் இப்படி பொது இடங்களில் நடந்து கொள்வது நாகரீகம் இல்லை. அவரின் மீதுள்ள மரியாதை குறைகிறது. இந்த குறைந்த பட்ச பிரஷரைக்கூட மேனேஜ் செய்யமுடியாத இவர் ஆட்சிக்கு வந்து எப்படி பலமுக பிரஷர்களை சமாளிப்பார்?

ஆனால் எனக்கென்னவோ விஜயகாந்த் வந்துவிடுவார் போல்தான் தெரிகிறது. "அவரோட ஆளையே இந்த அடி அடிக்கிறாரே...அப்ப தப்பு செய்றவங்களை எப்பிடி அடிப்பாரு" என்று நம்பும் மக்கள் இருக்கும் வரை இவரை ஒன்றும் செய்யமுடியாது.


ஒரு SMS நகைச்சுவை

ஒரு எரிமலை வெடித்துச் சிதறுவதற்கு யாரும் கற்றுத்தருவதில்லை,
கடல் சுனாமியாய்ச் சீறுவதற்கு யாரும் கற்றுத்தருவதில்லை,
காற்று சூறாவளியாய் வீசுவதற்கு யாரும் கற்றுத்தருவதில்லை...
அது போல்.....

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுக்கவும் யாரும் கற்றுத்தருவதில்லை, ஏனெனில்.....................

இயற்கைச் சீற்றங்கள் தானாகத்தான் நிகழும் :-)

(SMS அனுப்பிய நண்பர் வெங்கடபதிக்கு நன்றி...நண்பேண்டா....)

அடுத்த வாரம் பார்க்கலாம்,
- ஷோபன்