06 December, 2006

8. டேயமைனா... டேயாலோசை

பொதுவாகவே கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவற்றில் பாடுபவர்களுக்கென்றே பிரத்யேகமான குரல் வாய்த்திருக்கிறது. எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம், இவர்களின் உண்மையான குரலே இப்படித்தானா அல்லது வழி வழியாகவே ஒருவர் பாடுவதின் பாதிப்பு மற்றவர்க்கும் தொற்றி அதனால் அவர்களும் அப்பிடி பாடுகிறார்களா என்று தெரியவில்லை.


ஒரு உதாரணத்திற்கு, பருத்தி வீரன் -ல் வரும் 'டங்கா டுங்கா தவிட்டுக்காரி' பாடலில் ஐந்து பேர் பாடியிருக்கிறார்கள். அனைவருக்குமே தட்டையான சற்றே முரட்டுக் குரல்.
"டேயமைனா டேயமைனா டேயமைனா டேயாலோசை
டேயமைனா டேயமைனா டேயமைனா டேயாலோசை"
- என்ற பகுதியையும் (இதற்கு என்ன அர்த்தம்?)

"எங்கள் குல தங்கம்
தேவர் குல சிங்கம்
அருள் முத்து ராமலிங்கம்"
- என்ற பகுதியையும் கேட்டால் இதை உணர முடியும்.

என்னதான் அவர்களின் பாடல்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கும், சற்றே நெளிய வைக்கும் வார்த்தைகள் இருந்தாலும், அந்த குரல்களில் தெறிக்கும் வலியும், வேதனையும், வறுமையும், ஏக்கமும் நெஞ்சை பிசைபவையாகவே இருக்கின்றன.

இவர்கள் மட்டும் அல்ல, ரயிலில் மற்றும் தெருவில் பாடி பிழைப்பு நடத்துபவர்கள், லேகியம் விற்பவர்கள், பல்வேறு பொருட்களை ஏலம் விடுபவர்கள் (பிதாமகன் சூர்யா கதாபாத்திரம் போல்), ரயில் நிலையங்களில் காபி, தேனீர் விற்பவர்கள் போன்றோர்களுக்கும் தனிப்பட்ட குரல் ஈர்ப்பு இருக்கிறது.
..
ரயிலில் பாடி யாசகம் கேட்கும் விழியற்றோர்கள் எப்படி அவர்கள் பாடும் பாடலை தேர்ந்தெடுக்கிறார்கள்? அவர்களுக்கென்றே சில பாடல்கள் இருக்கிறதா?

"மண் குடிசை வாசலென்றால்....
அய்யா கண் பார்வை தெரியாது..........
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுப்பதில்லை...
அய்யா....அம்மா...கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...
இவன் யாருக்காக கொடுத்தான்..."
..
இதைப் போலவே தெருவில் லேகியம் விற்பவர்களின் குரலைக் கேட்டாலே நின்று விடுவேன். அதென்னவோ தெரியவில்லை சின்ன வயதிலிருந்தே இவர்களின் குரல்கள் மீது தனி ஈர்ப்பு.
..
".......பெரியோர்களே, தாய்மார்களே, வாலிப, வயோதிக அன்பர்களே, பாருங்க சார் எங்கள் மருந்து கம்பெனியின் சார்பாக ஒரு கால் அவர் விளம்பரம் சார். பாருங்க சார் இந்த லேகியத்துல ஏழு வகையான மூலிகைகள் கலந்து இருக்கு சார். பாருங்க சார் ஆல வேரு, அங்க வேரு, புங்க வேரு, புருச வேரு, நின்னு அடிக்கிற நீல வேரு, காக்கைக் கருங்குடல், கண்ணில்லாத சிட்டுக்குருவி. பாருங்க இப்பிடி பல அரிய அரிய மூலிகைகள் ....." எனக்கு எப்போதுமே இந்த மாதிரியான குரல்கள் மிக விருப்பமானவையாகவே இருந்திருக்கிறது.
..
அவர்களும் என்னதான் செய்வார்கள், வயிற்றைக் கழுவ என்னவெல்லாமோ செய்யவேண்டியிருக்கிறது. விதியின் பாடலுக்கு ஆட வேண்டியிருக்கிறது.
..
".....டேயமைனா டேயமைனா டேயமைனா டேயாலோசை
டேயமைனா டேயமைனா டேயமைனா டேயாலோசை......"

4 comments:

சுந்தர் / Sundar said...

//அவர்களும் என்னதான் செய்வார்கள், வயிற்றைக் கழுவ என்னவெல்லாமோ செய்யவேண்டியிருக்கிறது. விதியின் பாடலுக்கு ஆட வேண்டியிருக்கிறது//

நான் தினமும் சாமி கும்புடுறேன் ..இருந்தபோதிலும்
கடவுளை பற்றிய கேள்வி எழுகிறது ..

நல்ல பதிவு ...

ஷோபன் said...

வாங்க சுந்தர்,

நீங்க தான் முதல் கமெண்ட். நன்றி.

//நான் தினமும் சாமி கும்புடுறேன் ..இருந்தபோதிலும்
கடவுளை பற்றிய கேள்வி எழுகிறது ..//

அதுதான் மேட்டர். நமக்கு கஷ்டம் எவ்வளவு தான் வந்தாலும், நம்பிக்கை இருக்கோ இல்லியோ சாமி கிட்ட வேண்டிக்கிறோம். சமீபத்தில படிச்சது, கடவுள் நம்மால தாங்கிக்கொள்ளக்கூடிய அளவுக்குதான் சோதனைகளை தருவார். நான் சொல்றது சரிங்களா சுந்தர்?

Anonymous said...

vanakam nan....
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுப்பதில்லை...
arumaiii, enakum rail la padaravangaloda kural a keta eatho penum...
nala pathivu..
sevai thodarattum
barathi

ஷோபன் said...

வாங்க பாரதி,

என் பழைய பதிவுகளை தேடிப் பி(ப)டித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

//sevai thodarattum//

அட நீங்க வேற! இதுல சேவையெல்லாம் ஒன்னும் இல்லை. ஏதோ நான் பார்த்தது, கேட்டதுகளை இந்த இடத்துல கொட்டுறேன், அவ்வளவுதான்.

ஆமாம் பாரதி, உங்களிடம் வலைப்பூ இருக்கிறதா?