25 February, 2007

17. பருத்திவீரன் - ஒரு பார்வை

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பருத்திவீரன் படம் இன்றுதான் பார்த்தேன். ஒரு வரியில் சொல்வதானால் அசத்திவிட்டான் பருத்திவீரன்.

கதை என்று பார்த்தால் புதிதாக அல்லது பெரிதாக ஒன்றும் இல்லை (இது ஒரு உண்மைக் கதை). ஆனால் சொன்ன விதத்தில்தான் அட்டகாசமே.
பருத்திவீரனை விரட்டி விரட்டி காதலிக்கும் முத்தழகு, இதனை ஆதரிக்கும் ப.வீ.ன் சித்தப்பா செவ்வாயன், எதிர்க்கும் முத்தழகின் அப்பா கழுவன், காரணம் சாதி மற்றும் முன் பகை. கடைசியில் பருத்திவீரனும் முத்தழகும் என்ன ஆகிறார்கள் என்பதுதான் கதை.

பருத்திவீரனாக சூர்யாவின் தம்பி கார்த்தி, முத்தழகாக ப்ரியாமணி, செவ்வாயனாக சரவணன் ( நந்தாவில் ராஜ்கிரணின் மருமகனாக வருவாரே), கழுவனாக பொன்வண்ணன். வாழ்ந்திருக்காய்ங்கணே.

கார்த்திக்கு இது முதல் படமானே சந்தேகமா இருக்கு, அசத்துகிறார். கிட்டத்தட்ட சூர்யாவின் சாயல், உடல்மொழி மற்றும் குரல். இது இவருக்கு பலமா, பலவீனமா என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். இவருக்கு அட்டகாசமான கிராமத்து சண்டியர் பாத்திரம். ஒரு வேலையும் செய்யாமல், எப்போதும் மப்பில் திரிவது, ரம்மி விளையாடி காசு பார்ப்பது, அடிதடி, சண்டை வெட்டு குத்து என்று எப்போதும் பருத்தியூர் போலீஸ் ஸ்டேசனிலும், கமுதி கோர்ட்டிலும் கிடப்பது இதுதான் வேலை.

இது மிகவும் போரடித்துப் போக தன் வாழ்க்கையின் லட்சியமாக ஒருமுறையாவது சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு போக வேண்டும், டி.வி., பத்திரிக்கைகளுக்கு கை அசைத்தபடியே பேட்டி கொடுக்க வேண்டும் என்று சித்தப்பா செவ்வாயனிடம் தண்ணியடித்துவிட்டு உளருவது அட்டகாசம்.

படம் முழுக்க நக்கலும் நையாண்டியுமாக மதுரைத் தமிழில் பின்னுகிறார். முத்தழகுவின் காதலை ஏற்றுக்கொண்ட பின், நெஞ்சில் ஆர்ட்டின் படம் பச்சை குத்தி அதில் அம்பு விட சொல்வது, கரகாட்டக்காரர்களை மிரட்டி இவர்களுக்கு மட்டும் ஆடச்சொல்லி சித்தப்புவுடன் ஆட்டம் போடுவது, முத்தழகுவிடம் தன் காதலை வெளிப்படுத்திவிட்டு கெத்தாக நின்று போஸ் குடுப்பது, பின்னாலேயே சென்று கோவிலுக்கு வா என்று சொல்லிவிட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நாங்கெல்லாம் யாரு என்பது மாதிரியான கெத்தாக நடப்பது, கடைசிக்காட்சியில்.....அது வேண்டாம், திரையில் பாருங்கள், பின்னுகிறார் கார்த்தி.

ப்ரியாமணிக்கு இவ்வளவு நடிக்கத் தெரியுமா, அடுத்த சர்ப்பிரைஸ் இது. சரக்கு ஊற்றிக்குடுத்து வீரனை கட்டிலில் கட்டிப்போட்டு பச்சை குத்திவிடுவதாகட்டும், தூங்கிக்கொண்டிருக்கும் வீரன் மீது ஸ்டூலை எடுத்துப்போட்டு உக்கார்ந்து அவன் நெஞ்சின் மீது கால் வைத்து நாளைக்கு எனக்கு பொறந்த நாளு வந்து பாரு என்று மிரட்டுவதாகட்டும், வீரனுடன் சுற்றுவதை பார்த்த அப்பா கழுவன் வீட்டில் அடி பின்னிய பிறகு சோற்றை அள்ளிப்போட்டு, கறியுடன் சேர்ந்து பிசைந்து சாப்பிடும் வேகம் ஆகட்டும், வீட்டை விட்டு வீரனுடன் ஓடிப்போக முயலும் போது தடுக்கும் அம்மாவின் கழுத்தில் அரிவாளை வைத்து முறைப்பதாகட்டும், இவையனைத்தையும் விட கடைசிக்காட்சியில் பிரமாதப்படுத்திவிட்டார். ப்ரியாமணிக்கு ஒரு பேர் சொல்லும் படம்.

இவர்களைத் தவிர படம் முழுதும் வீரனின் கூடவே வரும் செவ்வாயன் சரவணன், கழுவன் பொன்வண்ணன், இவரது மனைவியாக வரும் பெண்மணி, அரைச்சாக்கு என்ற பெயரில் வரும் சிறுவன், கஞ்சா கருப்பு (பருத்திவீரனும் செவ்வாயனும் பண்ணுகிற அலப்பறைக்கு முன்னால் இவரின் காமெடி எடுபடவில்லை), மற்றும் பல பெயர் தெரியாத புது கிராமத்து முகங்கள் எல்லோரும் உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

வசனம், பாடல்கள், ஒலி, ஒளிப்பதிவு எல்லமே கிராமத்து வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. மதுரை ஸ்லாங் புரியாதவர்களுக்கு கொஞ்சமே கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அழுத்தமான கதை என்று இல்லாவிட்டாலும், பருத்திவீரன் செய்த சில தவறுகள் எப்படி முத்தழகுவை பாதித்தது என்ற க்ளைமாக்ஸ் நன்றாக இருந்தாலும், ஏதோ குறைவது போல் இருக்கிறது.

ஒரு அருமையான கிராமத்து காதல் கதையை பார்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக பார்க்கலாம். அட்லீஸ்ட் கார்த்தி மற்றும் ப்ரியாமணிக்காக பார்க்கலாம்.

மேலும்
சென்னைக் கச்சேரியில் தேவ் அண்ணனின் விமர்சனம்
குரல்வலை : வலைகுரலின் விமர்சனம் இங்கே

15 comments:

சினேகிதி said...

nalla vimarsanam...padam inimathan parka vendum.

ஷோபன் said...

வாருங்கள் சினேகிதி,

முதன் முதலில் வந்திருக்கிறீர்கள், நன்றி. உங்கள் ஊரில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளதா?

Bee'morgan said...

nalla vimarsanam.. padathai udane parka thoondukirathu..

Unknown said...

நான் நல்ல விமர்சனம். தொடருங்கள் உங்கள் முயற்சியினை.. நம்ம கச்சேரியிலே உங்கப் பதிவுக்கு இணைப்புப் போட்டுக்குலாம் தானே.. வாழ்த்துக்கள்.

Bee'morgan said...

நல்ல விமர்சனம்....படத்தை உடனே பார்க்கத் தூண்டுகிறது.

ஷோபன் said...

வாங்க Bee'morgan,

முதல் வருகை, வணக்கம், வருகைக்கு நன்றி. நீங்க தனியா உக்காந்து பாக்கும்போது ரொம்ப நல்லாவே ரசிக்க முடியும். சமீப காலத்தில் வந்த டப்பா படங்களை விட இது எவ்வளவோ தேவலாம். பாத்துட்டு உங்க கருத்தயும் சொல்லுங்க.

ஷோபன் said...

தேவ் அண்ணே,

நீங்களும் முதல் தடவ வந்திருக்கீங்க, வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

//நம்ம கச்சேரியிலே உங்கப் பதிவுக்கு இணைப்புப் போட்டுக்குலாம் தானே.. //

தாராளமா...இதுக்கெல்லாம் கேக்கணுமாணே, டேங்ஸ்ங்ணே :-)
வாழ்த்துக்களுக்கு நன்றிணே.

Shri said...

vimarsanam nandraaga irunthathu.
padathin highlights ponamthinni,muthazagi yin amma, sevaazai yin aatha... innum pala
ithu maariyaana charecters ivlo nativity oda ithuvarai yentha padathilum vanthathillai.
kandipaaga thesiya viruthugalai thattisellum intha padam.

ஷோபன் said...

வாங்க Harish,

நன்றி. நீங்கள் சொன்னது போல் பிணந்திண்னி, செவ்வாயன் மற்றும் முத்தழகியின் அம்மாக்கள் அசத்தியிருப்பார்கள். முத்தழகியின் அம்மாவாக வரும் பெண் விருமாண்டியில் பசுபதியின் மனைவியாகவும் அசத்தியிருப்பார். மேலும் பெரும்பான்மையானவர்கள் புதுமுகம் என்பதால் ரசிக்கமுடிகிறது.

அடிக்கடி வாருங்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

MyFriend said...

naan innum paarkkavillai.. padam unge vimarsanam maathiriye superaa irukkumnu nambikkai irukku.. athhaan wait panni paarkkalaamnnu irukken.. ;)

ஷோபன் said...

என் தோழி,

//padam unge vimarsanam maathiriye superaa irukkumnu nambikkai irukku//

நன்றி. படம் நிச்சயமாய் உங்களை சந்தோஷப்படுத்தும், பாருங்கள்.

Anonymous said...

vimarsanam nalla panreenga,
paruthi veeran padam paarthu vittu naan 3 naal thoongavillai,padam ennai rombavum paathithu vittathu.
Ameer kalakkitaaru.
kaarthi=chinna kamal(antha alavukku ragalai panniyirukkru).
saravanankitta ippadi oru thiramaya? asanthuvitten.

ஷோபன் said...

வாங்க வள்ளல்,

வருகைக்கு நன்றி.

//vimarsanam nalla panreenga
நன்றிங்க.

மன்னிக்கனும், கிட்டத்தட்ட ஒரு மாசம் கழிச்சு வலைப்பூ பக்கம் வந்ததுனால இப்பதான் பதில் போட முடிஞ்சது.

//kaarthi=chinna kamal(antha alavukku ragalai panniyirukkru).

கார்த்தி சின்ன கமலா இல்லையா என்பது போக போக தெரியும், ஆனால் அதற்கான அடித்தளத்தை பலமாகவே போட்டிருக்கிறார். அடிக்கடி வாங்க.

Anonymous said...

net-lirunthu, thiruttu thanamaa download pannipaarthuttu, oru vimarsanam vEra ezhuthuReengalE.

ஷோபன் said...

அனானி அவர்களே,

நான் திரைத்துறையை சார்ந்து இருப்பதால் எனக்கு திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடப்படும் படங்களை பார்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பெரும்பாலும் படங்கள் வெளியான முதல் நாளே அல்லது சில வேளைகளில் அதற்கு முன்னர் நடக்கும் ப்ரிவ்யூவிலேயே பார்த்துவிடுவேன். இந்த விமர்சனம் என்பது நான் உங்கள் மேல் திணிக்கும் கருத்து கிடையாது, படத்தைப் பற்றிய எனது பார்வை அவ்வளவுதான். திருட்டுத்தனமாக படம் பார்த்தவர்கள் விமர்சனம் செய்யக்கூடாது என்கிற உங்கள் கருத்தை ஏற்கும் வேளையில் காசு கொடுத்து படம் பார்க்கும் எனக்கு அதை விமர்சிக்கும் உரிமை இருக்கிறது என்றும் சொல்லிக்கொள்கிறேன். உங்கள் கருத்தை நீங்கள் தைரியமாக உங்கள் பெயரிலேயே சொல்லியிருக்கலாமே, எதற்கு அனானியாக...?